அழிந்து வரும் மூலிகைகளை பாதுகாத்து சித்த மருத்துவம் மேற்கொள்ளும் நபர்
ஆங்கில மருத்துவம் உலகம் முழுவதும் வியாபித்தாலும் எங்கோ ஒரு மூலையிலாவது தமிழ் மருத்துவமும், சித்த மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அவர்களையும் அவர்களின் மருத்துவ முறைகளை ஆங்கில மருந்துகளும், மருத்துவமுறைகளும் மறக்கச் செய்தாலும் நவீன மருத்துவ முறைகளே கைவிட்ட சில நோய்களுக்குச் சித்த மருத்துவம் இன்றும் குணமளிக்கத்தான் செய்கின்றது.
மன்னார் காத்தான் குளப்பகுதியில் பர்னாந்து அன்ரனி என்பவர் பாரம்பரியமாக கற்றுத் தேர்ந்த சித்த மருத்துவத் துறையைப் பாதுகாத்து, இன்றும் வைத்திய சாலைகளால் குணப்படுத்த முடியாமல் போன பல விதமான எலும்பு முறிவுகள், தறிவு நோவுகள் உடைவுகளை சுகப்படுத்தி வருகின்றார்.
இவர் இயற்கையான மூலிகைகள் மற்றும் அழிவின் விழிம்பில் உள்ள மூலிகைகளைப் பாதுகாப்பதுடன் அவ்வாறான மூலிகைகளைப் பயன்படுத்தி இயற்கையான முறையில் பதப்படுத்தி மருந்துகளைத் தயாரித்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்.
மக்களின் நிலைக்கு ஏற்ப குறைந்த கட்டணங்களுக்குச் சிகிச்சை அளிப்பதாலும், இயற்கையான முறையில் சிகிச்சை மேற்கொள்வதாலும் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அன்ரனி அவர்களிடம் சிகிச்சை பெறுவதற்காக மக்கள் வருகின்றனர்.
இலங்கையில் இடம் பெற்றஇறுதி யுத்தத்தின் போது பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த அன்ரனி, தன்னுடைய தாயையும் தான் பாரம்பரியமாக கற்று வந்த மருத்துவ குறிப்புக்கள் ஏடுகள் புத்தகங்களைக் கூட காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் இடப்பெயர்வைச் சந்தித்துள்ளார்.
அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் ஆயுர்வேத பாதுகாப்புச்சபையினால் நடத்தப்பட்ட பயிற்சியினை நிறைவு செய்து தற்போது வரை ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தை நடாத்தி வருவதுடன், இலங்கையில் உள்ள மூலிகை தோட்டங்களில் ஆயுர்வேதம் கற்கின்ற மாணவர்களுக்கு மூலிகை தொடர்பாக விரிவுரைகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
இவருடைய சேவையைப் பாராட்டி இவருக்கு 'தேச கீர்த்தி' விருதும் வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இவை எல்லாம் கடந்து நவீன மருத்துவ முறை காரணமாகவும் குடியேற்றப் பிரச்சினைகள் காரணமாக அதிகளவான மூலிகை இனங்கள் அழியும் நிலையில் உள்ளதாகவும் ஆயுள் வேத மருத்துவர்களும் அவர்களுடைய மருத்துவ முறைகளும் அழிவு நிலையில் உள்ளதாக அன்ரனி கவலை வெளியிடுகின்றார்.
எனவே அனைவரும் மூலிகைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும் எனவும் சித்த மருத்துவத்துறையை ஊக்குவிக்க வேண்டும் எனவும் மூலிகைகள் தொடர்பாகப் பிள்ளைகளுக்குக் கட்டாயம் கற்பிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் வைத்தியசாலைகளைத் தவிர ஏனைய இடங்களில் கதிர் வீச்சு இயந்திரம் இல்லாமையால் வேறு மாவட்டங்களிலிருந்து கதிர்வீச்சு அறிக்கைகளைப் பெற்று மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும், அதே நேரத்தில் ஆங்கில மருத்துவ முறை காரணமாகச் சித்த மருத்துவ முறை அழிவுப்பாதையில் செல்வதனால் அவற்றைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் பர்னாந்து அன்ரனி கோரிக்கை விடுத்துள்ளார்.



