விகாரமகாதேவி பூங்காவில் போயா தின வழிபாடுகள்
விகாரமஹாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் மற்றும் பக்தர்கள் இன்று காலை போயா தின வழிபாடுகளை அங்கு மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து விகாரமஹா தேவி பூங்காவில் சத்தியாக்கிரகம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
தேரர்கள் குழு உறுதி
கடந்த பத்து நாட்களாக குறித்த சத்தியாக்கிரகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஞானசார தேரர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகும் வரை அவ்விடத்தை விட்டும் நகரப் போவதில்லை என்று தேரர்கள் குழு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பௌத்தர்களின் வப் பௌர்ணமி தினமான இன்று விகாரமஹா தேவி பூங்காவில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர், பூங்காவின் புத்தர் சிலை முன்பாக இன்று காலையிலேயே போயா தின வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போயா தின வழிபாடுகளுக்காக பெருமளவான பொதுமக்களைத் திரண்டு வருமாறு தேரர்கள் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட போதும் எதிர்பார்த்த அளவு பொதுமக்கள் அங்கு வருகை தரவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
