பண்டாரவன்னியன் பெயர் பலகையின் நிலை : மாவீரமற்ற தோற்றத்தின் விளைவு
மாவீரன் பண்டாரவன்னியன் தொடர்பான பெயர்ப் பலகையின் மாவீரமற்ற தோற்றம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது.
முல்லைத்தீவு(Mullaitivu)கற்சிலைமடுச் சந்தியில் நிறுவப்பட்டுள்ள இந்த பெயர்ப்பலகை தொடர்பிலேயே இந்த அதிருப்தி மனநிலை தோன்றுவதாக தமிழார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவீரன் பண்டாரவன்னியன் என்று சொல்லிவிட்டு மாவீரமற்ற தோற்றத்தை பெயர்ப்பலகை கொண்டிருப்பது பண்டாரவன்னியன் சிலை வளாகத்திற்கு செல்வதற்கான மனவிருப்பை ஏற்படுத்தி விடாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பேச்சில் இருக்கும் வீரத்தை செயலிலும் காட்டி விடுவதே சாலச்சிறந்தது. பெயர்பலகைகள் மனித மனங்களில் ஏற்படுத்தி விடும் உணர்வுகள் தொடர்பிலான உளவியல் சார் சிந்தனைகள் இந்த பெயர்ப்பலகை விடயத்தில் கருத்தில் எடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
சாய்ந்து போன பெயர் பலகை
கற்சிலைமடுச் சந்தியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பண்டாரவன்னியன் கற்சிலை வளாகத்திற்கு செல்வதற்கான வழி காட்டிப் பலகையாக இந்த பண்டாரவன்னியன் பெயர்ப்பலகை அமைந்துள்ளது.
இது புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் அமைந்துள்ளது கற்சிலைமடுச் சந்தியில் நிறுவப்பட்டுள்ளது.
"மாவீரன் பண்டாரவன்னியன் சிலை வளாகம்.கற்சிலைமடு" என மும்மொழிகளிலும் குறிப்பிட்டப்பட்ட பெயர்ப்பலகையாக இது இருப்பதோடு அதில் சிலை வளாகத்திற்கு உள்ள தூரமும் காட்டப்படுவதற்கு முயற்சிக்கப்பட்ட போதும் அதனை குறிப்பிடவில்லை என்பதையும் அவதானிக்க முடிகின்றது.
தூரம் என குறிப்பிட்டு அம்புக்குறி காட்டப்பட்ட போதும் தூரம் எவ்வளவு என குறிக்கப்படவில்லை.
இதனை நிறுவுவதற்கான அனுசரணையினை தெய்வேந்திரம் இந்திரதாஸ் வழங்கியிருக்க நிதியினை V.P Foundation வழங்கியிருப்பதாக அதில் குறிக்கப்பட்டுள்ளது.
பிரதான அறிவுறுத்தலான "மாவீரன் பண்டாரவன்னியன் சிலை வளாகம்.கற்சிலைமடு" என்பதனை மும்மொழிகளிலும் குறிப்பிட்டுள்ள போதும் ஏனைய விடயங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் மட்டும் குறிக்கப்பட்டுள்ளது.
முழுமைப்படுத்தாத நிலை
பண்டாரவன்னியன் சிலை வளாகத்திற்கு சென்று வரும் சுற்றுலாப்பயணிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் உதவும் நோக்கில் இது நிறுவப்பட்டதாக கற்சிலைமடு வாழ் மக்களிடையே வினவிய போது அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆயினும் சிங்கள மக்கள் தூரத்தினை அறிந்து கொள்ள தூரம் என்ற சொல்லை சிங்களத்திலும் குறிப்பிட்டிருக்கலாம் என சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
எனினும் எவ்வளவு தூரத்தில் சிலை வளாகம் இருக்கின்றது என்பதை குறித்து இருந்தால் தூர இலக்கத்தினைக் கொண்டாவது அவர்கள் தூரத்தினை புரிந்து கொள்ள வழி ஏற்பட்டிருக்கும்.
ஆக மொத்தத்தில் இந்த பெயர்ப்பலகையின் நிறுவல் என்பது ஆர்வத்தினடிப்படையில் அமைந்திருக்கிறது.முழுமைப்படுத்தப்பட்ட ஆளுமை வெளிப்பாடுடையதாக இந்த பெயர்ப் பலகையின் நிறுவல் அமையவில்லை.
திருத்தம் தேவை
கற்சிலைமடுச் சந்தியில் உள்ள பண்டாரவன்னியன் சிலை வளாகத்திற்கான வழிகாட்டியாக அமையும் பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ள இடத்தினைச் சூழவுள்ள நிலம் தூய்மையாக்கப்படுவதோடு அதனை சூழ கவர்ச்சிகரமான தோற்றத்தினை கொடுக்கவல்ல கட்டமைப்புக்களை நிறுவ வேண்டும்.
சாய்ந்து போயுள்ள பெயர்ப்பலகை நிமிர்ந்த நிலைக்கு மாற்றப்பட்டு வலுவான நிலைநிறுத்தல் கால்களோடு அதனை நிலைநிறுத்த வேண்டும்.
பெயர்ப்பலகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நிறுவப்படுவதோடு அவற்றை நிறுவப்பட்ட தோற்றத்தோடு தொடர்ந்து பேணலும் அவசியமாகும்.இதனை வன்னியில் உள்ள பல இராணுவ முகாம்களில் அவதானிக்க முடிகின்றது.
எடுத்துக்காட்டு
வன்னியில் உள்ள பல இராணுவ முகாம்களின் பெயர்ப் பலகைகள் மற்றும் அவற்றின் முகப்பில் நிறுவப்படும் அந்த முகாம்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ள வளைவுகளை உற்று நோக்கினால் அவர்கள் பெயர்ப் பலகைகளுக்கு வழங்கியிருக்கும் முக்கியத்துவத்தினை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
ஒட்டுசுட்டான் சந்தியில் உள்ள இராணுவ முகாம் மற்றும் முள்ளிவாய்க்கால் காளி கோவிலுக்குச் செல்லும் முச்சந்தியில் உள்ள பெயர்ப்பலகை, வட்டுவாகல் கோத்தபாய இராணுவ முகாம் வாயிலில் உள்ள பெயர்ப்பலகை போன்றன சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
அது போல் யாழ் இந்துக் கல்லூரியின் பெயர்ப்பலகை மற்றும் முச்சந்தி பெயர்ப்பலகை போன்றனவும் இங்கே உற்று நோக்கத்தக்கது.
தமிழரின் பாரம்பரியமிக்க இந்த அடையாளங்கள் தொடர்பில் அதிகளவு முன்னுரிமை கொடுக்கப்படும் போது கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்றால் அது மிகையில்லை.
தமிழர்களின் மனங்களில் மதிப்புமிக்க மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றால் இது போன்ற வீரமிகு விடயங்களில் கம்பீரமும் மனங்கவர்ந்த தோற்றமும் கொண்ட முழுமைப்படுத்தப்பட்ட கட்டமைப்பும் அவசியம் என்பதை உரிய தரப்புக்கள் சார்ந்த தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கான மாற்றங்களை ஏற்படுத்த முயல வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |