நல்லூர் ஆலயத்தை உள்ளே தரிசிப்பதற்கு பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதியை அழைத்த நிர்வாகம்! குவியும் பாராட்டு (Photos)
மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் இன்றைய தினம் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு வருகை தந்தேன் என இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பிறாயன் ஊடக்வே இன்று (25.07.2023) நல்லூர் கந்தனை ஆலயத்திற்குள் சென்று வழிபட்ட பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மதங்களுக்கிடையில் நல்லிணக்கம்
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் இன்றைய தினம் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு வருகை தந்தேன் என பாப்பரசரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இந்த இடம் இந்துக்களின் புனித இடம், ஆனால் நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் இன்றைய தினம் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாகவே இங்கே வருகை தந்திருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஆலய விதிமுறை
நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுரு அனுமதித்தமை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்ப புள்ளியாக பார்க்கின்றோம் என யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்குள் நாட்டின் ஜனாதிபதி செல்வதாக இருந்தால் கூட மேலாடை கழற்றி செல்ல வேண்டும் என்பது ஆலய விதிமுறை.
அதற்கமைய இன்றைய தினம் இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் நானும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தோம்.
உரிய நடைமுறைகளை பின்பற்றி நாங்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் எங்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள்.
ஆரம்ப புள்ளி
அந்த அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் நமது கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று கந்தனை தரிசித்திருந்தோம்.
எனவே இந்த விடயமானது மத நல்லிணக்கத்திற்கான ஒரு முன்னுதாரணமாகும் மற்றும் மத நல்லிணக்கத்திற்கான ஒரு ஆரம்ப புள்ளி என கூறலாம்.
மேலும் எதிர்காலத்தில் நாங்கள் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இணைந்து செயற்படுவதற்கான ஒரு ஆரம்ப புள்ளியாக நாங்கள் பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக நல்லூர் கோவிலுக்குள் ஆண்கள் மேற்சட்டையுடன் செல்ல இயலாது என்பதை ஒரு விதிமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எனினும் பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதிக்கு வழங்கப்பட்ட அனுமதியானது இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடு என பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |