ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான போராயரின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க இணங்கிய திருத்தந்தை
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கும் சர்வதேச போராட்டத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளை வழங்க கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை பிரான்சிஸ் (Francis) இணக்கம் வெளியிட்டுள்ளார்.
பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் திருத்தந்தைக்கும் இடையில், வத்திகானில் நேற்று நடைபெற்ற சிறப்பு பேச்சுவார்த்தையின் போதே திருத்தந்தை இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் வரை நடந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சந்திப்பின் போது திருத்தந்தை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு சிறப்பான வரவேற்பை வழங்கியுள்ளார்.
சாதாரணமாக அரச தலைவர்களோ, திருச்சபையின் பிரதிநிதிகளோ திருத்தந்தை சந்திக்கும் போது அந்த உத்தியோகபூர்வ சந்திப்பு மிகப் பெரிய மேசையில் நடைபெறுவதுண்டு.
எனினும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனான சந்திப்பை திருத்தந்தை மிக நெருக்கமாக அருகில் அமர்ந்து நடத்தியமை சிறப்பம்சம் என கத்தோலிக்க திருச்சபையின் தகவல்கள் கூறுகின்றன.