கச்சதீவுத் திருவிழாவில் குறைபாடுகள் : பாகுபாடு காட்டப்பட்டதாக இரு நாட்டு பக்தர்களும் குமுறல்
கச்சதீவு பெருநாள் ஒழுங்கமைப்பு தொடர்பாக இந்திய மற்றும் இலங்கைப் பக்தர்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதில் 2800 இலங்கை பக்தர்களும் 2100 இந்திய பக்தர்களும், வியாபாரிகள், உத்தியோகத்தர்கள் 200 பேர் என மொத்தமாக 5100 பேர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து வருகை தந்த பக்தர்கள் தமக்கு வழங்கிய உணவு திருப்தியாக அமையவில்லை எனவும் ஏதோ உணவை வழங்க வேண்டும் என்பதற்காக வழங்கியமை போன்று அமைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
8000 யாத்திரிகள் வருவார்கள் என உத்தேசித்த போதும் அதற்கு ஏற்றவகையில் போதுமான
மலசலகூடங்கள் அமைக்கப்படவில்லை.
மலசலகூடம் ஒழுங்காக இல்லை எனவும் அமைக்கப்பட்ட மலசல கூடங்களிலும் முறையாக பராமரிப்பு அமையவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குடிதண்ணீருக்குப் பற்றாக்குறை
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு பின்னர் குடிதண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இதே விடயத்தை இலங்கைப் பக்தர்களும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
மேலும் இலங்கை கடற்படையினரின் ஆயுதங்கள் தமக்கு அச்சத்தை தருவதாகவும் இந்திய பக்தர்கள் தெரிவித்தனர்.
இதனை இலங்கை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் தம்மால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை என இந்திய பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகுபாடான கவனிப்பு
விசேட விருந்தினர்களுக்கு ஒருவாறாகவும் பக்தர்களுக்கு இன்னொரு வகையாகவும் பாகுபாடான கவனிப்பே கச்சதீவில் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதே நிலையில் இதே பிரச்சினைகளை இலங்கையர்களும் சுட்டிக்காட்டிய நிலையில் முக்கியமான நபர்கள் (VIP) இற்கு ஒரு மாதிரியான கவனிப்பு பொதுமக்களிற்கு ஒரு கவனிப்பு என பாகுபாடு எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தண்ணீர், மலசலகூடம் உணவு இதில் பாகுபாடு தேவையில்லை.
அனைவரும் யாத்திரீகர்களே எனவும் கடற்படை, இந்திய துணைதூதரகம் என்பதனை தாண்டி மாவட்ட செயலகம் தனது கடமையினை இம்முறை திருவிழாவில் கடமைக்காகவா செய்தது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெறுமதிமிக்க பொருட்களும் களவு
மேலும் கடற்படை, பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தும் தவறவிடபட்ட மற்றும் களவாடப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 35 பவுன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல பக்தர்களின் பெறுமதிமிக்க பொருட்களும் களவாடப்பட்டுள்ளன.
இதன் பொழுது தங்க சங்கிலி ஒன்றை கொள்ளையிட்டு தப்பி செல்ல முயன்றவர் மடக்கி பிடிக்கப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தபட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் மன்னார் பகுதியை சேர்ந்தவர் என அறிய முடிகிறது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் எதிர் நோக்கிய பிரச்சினைகள்
இதே நிலையில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கென படகு ஒன்று ஒதுக்கப்படுவதாகவும் பெறுமதி வாய்ந்த ஊடக சார் உபகரணங்களை வைக்க ஊடகவியலாளர்களுக்கென கூடாரம் வழங்கபட்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் அறிவித்ததை போன்ற ஊடகவியலாளர்கள் அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு இலங்கை கடற்படையின் ஊடக பிரிவு தங்க வைக்கப்பட்டிருந்தது.
ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட கூடாரத்தில் இலங்கை கடற்படையின் ஊடக பிரிவு தங்கியிருந்த பொழுது குறித்த இரு கூடாரமும் ஊடகம் என சுட்டிகாட்டியிருந்த நிலையில் ஊடகவியாலாளர்கள் மாவட்ட செயலகம் சார்பில் ஊடகத்திற்கு பொறுப்பான எவரும் வருகை தராத நிலையில் கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தமக்கென இடத்தை பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் யாழில் இருந்து கச்சைதீவு வரும் பொழுது மாவட்ட செயலகத்தில் இருந்து அழைப்பெடுத்து வாருங்கள் என தெரிவித்தவர்கள்.
மீள ஊடகவியலாளர்கள் திரும்புவதற்கு அழைப்பும் எடுக்கவில்லை, ஒழுங்கமைப்பும் செய்யவில்லை.
சிங்கள ஊடகவியலாளர்
இந்நிலையில் மாவட்ட செயலகம் கைவிட்ட நிலையில் கடற்படை அதிகாரிகளுக்கு தெரியபடுத்திய நிலையிலும் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த சுமார் 15 இற்கும் மேற்பட்ட சிங்கள ஊடகவியலாளர்களை கடற்படை விசேட படகுகளில் அனுப்பி வைத்தது.
அத்துடன் தமது உயர் அதிகாரிகளினது பிள்ளைகள் மற்றும் கடற்படையினரையும் அனுப்பிய நிலையில், சுமார் மூன்று மணித்தியாலமாக கச்சைதீவு கடற்கரையில் யாழ் முல்லைத்தீவை சேர்ந்த 10 ஊடகவியலாளர்கள் காவல் இருந்த நிலையில் இது குறித்து யாழ் மறைமாவட்டத்தின் பங்கு தந்தையான வண ஜெபரட்ணம் அவர்களிடம் தெரியப்படுத்தபட்டது.
இருப்பினும் தங்களுடைய கட்டுப்பாட்டில் இந் நிகழ்வு இல்லை என தெரிவித்தார்.
கடற்படை அதிகாரிகளின் அசமந்தம்
இந் நிலையில் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடாத நிலையில் வடமாகாண கடற்படை தளபதி அனுர தென்னகோனிடம் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கூறிய பொழுது என்னிடம் முறையிடவேண்டாம் எப்படியாவது செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஊடகவியலாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் வடதாரகை படகின் மூலமே ஊடகவியலாளர்கள் தமாக சென்றதை அவதானிக்க முடிந்தது.
மாவட்ட செயலகம் குறித்த விழா ஏற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பதில்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளின் அசமந்தம் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மீது காட்டப்பட்ட அக்கறை வடக்கு ஊடகவியலாளர்கள் மீது காட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அலைவரிசையற்ற நிலை
அலைவரிசையற்ற நிலையில் தமது செய்திகளை அனுப்ப தாமதானதாவும் ஊடகவியலாளர்கள் இதன்பொழுது சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதே வேளை தமது நிலமை தொடர்பில் அங்கு வருகை தந்த யாழ் இந்திய தூதூதர அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட போது தாம் கடற்படையுடன் பேசி படகினை ஒழுங்கமைத்து தருவதாக உறுதி மொழி வழங்கி சென்றனர்.
எனினும் ஊடகவியலாளர்களுக்கு படகு வசதி வழங்கப்படவில்லை.
குறித்த நிகழ்வுக்கு வருகை தந்த நீதிபதிகள் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கூட கடற்படையினரால் உரிய கவுரவம் வழங்கப்படவில்லை இல்லை என அங்கு வருகை தந்திருந்த உயர் அரச அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதே நிலையில் பயணிகள் படகுகள் வருகை தருமா? தராதா என்ற கேள்வி கச்சைதீவு
கடற்கரையில் எழுந்த நிலையில்
சில பொதுமக்கள் நெடுந்தீவிற்கு படகு மூலம் சென்று பின்னர் குறிகாட்டுவான்
நோக்கி திரும்பியதாக தெரிவித்துள்ளார்.
தாம் முறையான ஒழுங்குபடுத்தல் இன்மையால் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டதாவும்
அங்கு வருகை தந்த மக்கள் தெரிவித்துள்ளார்.




