சுவிட்சர்லாந்து - ஞானலிங்கேச்சுரத்தில் சுறவத்திங்கள் பொங்கல்விழா
சுவிட்சர்லாந்து - பேர்ன் நகரில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் தெய்வத் தமிழில் செந்தமிழ் திருமறை வழிபாட்டுடன் சுறவத்திங்கள் பொங்கல்விழாவும் - திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பும் மிகு சிறப்புடன் இன்று கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள்
பேர்ன் நகரபிதா திருநிறை. அலெக்ஸ் பொன் கிறாப்பென்றீட், பல்சமய இல்லத்தின் தலைவி திருமதி. றெகுலா மாத்தர், பேர்ன் மாநிலத்தின் முன்னை நாள் மனிதவளத்துறை பொறுப்பதிகாரி கெர்டா ஹவுக், முன்னைநாள் பேர்ன் யூறா கிறத்தவ திருச்சபை பொதுப்பணி இயக்குனர் அல்பேர்ற் நீடெர், முன்னை நாள் பேர்ன் நகர் பசுமைத்துறை பொறுப்பதிகாரி வல்ரெர் கிளவுசெர், பல்சமய இல்லத்தின் கணக்காளர் ஊர்சுலா எக்லேசியா, பேர்ன் வள்ளுவன் பாடசாலை சார்பாக பொன்னம்பலம் முருகவேள், சமூகசெயற்பாட்டாளர் நந்தினி முருகவேள், சமூகச்செயற்பாட்டாளர் லாவண்யா இலக்ஸ்மணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பொங்கல் விழாவில் பங்கெடுத்து சிறப்பித்தனர்.
பசு, காளை, கன்று
காலை 09.00 மணிக்கு தமிழ் வழிபாட்டுடன் பொங்கல் திருவிழா தொடங்கக்பெற்றது. தமிழ்நாட்டில் இருந்து சுவிசிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, நிலம் அமைப்பால் பசுக்காப்பகத்தில் பாதுகாக்கப்படும் காளை, கன்று, பசு ஆகியன சிறப்பு வழிபாட்டிற்கு வருவிக்கப்பட்டிருந்தன.
பொங்கல் விழாவில் உழவுக்கு உதவும் விலங்குகளுக்கும் நன்றி நவின்றது, குழந்தைகள் பெரியோர் உள்ளத்தில் தாயகத்து உணர்வினைத் தூண்டியிருந்தது.
பேர்ன் ஐரோப்பாத்திடலில் கோலமிட்டு தமிழில் வரவேற்பு எழுதப்பட்டு பொங்கற்பானை கரும்பு, மஞ்கள், இஞ்சிகொண்டு ஒப்பனை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வருகை அளித்திருந்த அடியர்களும், சிறப்பு விருந்தினர்களும் பொங்கல் பானையில் அரிசியிட்டனர்.
12.00 மணிக்கு பெரும்பொங்கல் பேர்ன் நகரபிதா லெக்ஸ், பல்சமய இல்லத்தின் தலைவி திருமதி றெகுலா ஆகியோர் பொங்கலோ, பொங்கல்!!! எனத் தமிழில் குலவையிட பகலவனிற்கு படையலிட்டுப் படைத்தளிக்கப்பட்டது.
தமிழ்ப் பாடசாலை பொங்கல்
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து, கொலிக்கன் தமிழ்ப்பள்ளி பேர்ன் பிள்ளைகள் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் முன்றலில்பொங்கலிட்டனர், சிறப்பு விருந்தினர்களை பூசெண்டு அளித்து வரவேற்றனர்.
சிறப்பு நடனம்
13.00 மணிக்கு, திருக்கோணேஸ்வரர் நடனாலயம் சொலத்தூண் மாணவர்கள் பாவலர் அறிவுமதி எழுதிய பனைமரமே பனைமரமே எனும் தயாகப்பாடலிற்கு சிறப்பு நாட்டிய நடனம் வழங்கினர்.
பேர்ன் நகரிற்கு நன்றி
சைவநெறிக்கூடத்தின் அழைப்பினை ஏற்று வருகை அளித்த நகரபிதாவிற்கு சிவருசி தர்மலிங்கம் இவ்வாறு நன்றி நவின்றார்:
«ஈழத்தமிழர்கள் சுவிற்சர்லாந்தின் காலநிலையையோ அல்லது சுவிசின் தனிச்சிறப்பு அழகினையோ கண்ணுற்று சுவிசிற்கு வருகை அளிக்கவில்லை, புலம் பெயர்விற்கான காரணம் பெரும் வலிகளுடன் சொல்லப்பட வேண்டிய வரலாறு ஆகும், சுவிசில் நாம் வாழ்ந்தாலும் எம் தமிழ்ச் செல்வங்கள் தமிழ்ப்பண்பாட்டினை அறிந்தவர்களாவும் சுவிசின் ஒரு சமூகமாகவும் அனைத்து வளங்களுடன் வாழ வேண்டும் என்பது சைவநெறிக்கூடத்தின் நோக்கம்,
இதனை ஏற்று பதிலுரை ஆற்றிய அலெக்ஸ் அவர்கள்: உலகில் போர்கள் அற்ற சூழல் வேண்டும், எங்கும் சமாதானம் பரவவேண்டும், மக்கள் இன்புற்றிருக்க வேண்டும், பொங்கல் திருநாளில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை நவில்வதுடன் அனைத்து வளங்களும் சிறக்கவும் வாழ்த்துவதாக தெரிவித்தார்.
மதிப்பளிப்பு
தமிழ்மக்கள் சார்பாளர்களாக பேர்ன் நகரபிதாவிற்கு பொன்னாடை போர்த்தப்பட்டதுடன் தமிழர் பண்பாட்டு தலைப்பாகை பரிவட்டமாக கட்டப்பட்டது.
இம் மதிப்பளிப்பினை தமிழ் அருட்சுனையர் திருச்செல்வம் முரளிதரன், சிவஞானசித்தர்பீட நிறுவனர்களான சிவயோகநாதன் ஐயா, வினாசித்தம்பி தில்லையம்பலம் ஆகியோர் ஆற்றினர். அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் திருக்கோவில் சார்பில் பூமாலை அணிவிக்கப்பட்டது.
பொங்கல்பரிசு
பொங்கல்விழாவினை இனிiயான நினைவாக இளந்தமிழ்ச் செல்வங்களின் உள்ளத்தில் பதிய வைப்பதற்காக சைவநெறிக்கூடத்தால் பொங்கல் பரிசுகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இவற்றை சிறப்பு விருந்தினர்களுடன் பேர்ன் நகரபிதா திரு. அலெக்ஸ் அவர்களும் வழங்கி வைத்தார்.
அனைவருக்கும் சிறப்பு பொங்கலும் அருளமுதும் அளித்து வழிபாடுகள் நிறைவுற்றது. சுறவத்திங்கள் மாலை ஐயப்பன் மண்டலவழிபாட்டு நிறைவு பெருவிழாவாக நடைபெற்றது. மாலையும் இளந்தமிழ்ச் செல்வங்களுக்கு பொங்கல் பரிசு அளிக்கப்பட்டது.