விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடியில் மாதுளைச் செய்கை
விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடிப் பகுதியில் 150 விவசாயிகள் ரெட் ஏஞ்சல் வர்க்கத்தையுடைய மாதுளைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் குறித்த விவசாயிகளுக்கு மாதுளைப் பயிற் செய்கை தொடர்பிலான பல பயிற்சிகளும், விளக்கங்களும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திங்கட்கிழமை(20.05.2024) விவசாய விஞ்ஞானிகள் குழுவொன்று அப்பகுதிக்கு விஜயம் செய்து மாளைப் பழச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடத்தில் காணப்படும் குறை நிறைகளைக் கேட்டறித்து கொண்டதுடன், மாதுளைச் செய்கையில் ஏற்படும் பூச்சுத்தாக்கங்கள், பழங்களைப் பழுதடையாமல் பாதுகாத்தல், போன்ற பல விளக்கங்களையும் தெழிவூட்டல்களையும் வழங்கியிருந்தனர்.
விவசாய விஞ்ஞானிகள் குழு
மேலும் மாதுளை கன்றுகளை விவசாயிகள் தாமாகவே தாய் மரத்திலிருந்து உற்பத்தி செய்து அதனை தகுந்த விலைக்கு விற்பனை செய்தல், அதற்குரிய சந்தைவாய்ப்புக்களை ஏற்படுத்துதல், போன்ற பல செயன்முறைப் பயிற்சிகளையும் விவசாய விஞ்ஞானிகள் குழுவினர் மாதுளைப் பழச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
இதன்போது விவசாய விஞ்ஞானிகளான என்.டி.லெஸ்லி, அருனந்தி, மற்றும் விவசாய நவீனமயமாக்கல் செயற்றிட்டத்தின் உத்தியோகஸ்த்தர்களும் இணைந்திருந்தனர்.
விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின்கீழ் களுவாஞ்சிகுடிப் பகுதியில் 150 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு தலா அரை ஏக்கர் வீதம் இந்திய ரெட் ஏஞ்சல் ரச மாதுளைப் பழச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.