கோர விபத்து தொடர்பில் மக்கள் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்
பொலனறுவை – மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த பயங்கர பேருந்து விபத்து இடம்பெற்ற கொத்தலிய பாலம் அடிக்கடி விபத்து இடம்பெறும் ஒரு பாலமாகவே உள்ளதென அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 7.25 மணியளவில் பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
அது அதிகளவான மக்கள் பயணிக்கும் பேரூந்து எனவும், வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காத்தான்குடி செல்லும் பேருந்தில் வழைமையான எண்ணிக்கையை விட அதிகமான பயணிகள் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அடிக்கடி விபத்துகள்
பேருந்து பயணத்தை ஆரம்பித்து 10 நிமிடங்களுக்குள் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தள்ளனர்.
மகாவலி ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ள கிளை ஆறுகள் கொத்தலிய பாலத்தின் கீழ் பாய்தமையினால், விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதி சதுப்பு நிலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் குறுக்கலாக உள்ளதால், ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் கடந்து செல்ல முடியாது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
விபத்து நடந்த உடனேயே, அருகில் உள்ள இராணுவ தளங்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அனைத்தும் பொலனறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் பொலனறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |