பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தும் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் : ஜனாதிபதி
பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான காலம் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நேற்று (20) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து பல்கலைக்கழகத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டதுடன், மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியுள்ளார்.
இதன்போது, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் இலங்கையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மேலும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வையொட்டி நினைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி: ''1985 இல் ஹிஸ்புல்லாஹ்வை நான் முதன் முதலில் இளைஞர் சேவை மன்றத்தில் சந்தித்தேன்.
அவர் இன்று இந்த சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பித்துள்ளார். இந்த பல்கலைக்கழகம் நமது பிள்ளைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான அறிவைக்கொண்ட மக்களே நமது நாட்டிற்கு அவசியமாகும். அதனால் தான் இந்தப் பல்கலைக்கழகம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது.
பட்டங்களை விற்கும் கடைகள்
நமது நாட்டின் பிள்ளைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மிகவும் நன்றி. இப்பல்கலைக்கழகத்துடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் அல்ல.
இந்நிறுவனத்திற்கும் கிடைக்கும் நிதி சேமிக்கப்பட்டு, குறித்த நிதி இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கே பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகில் இலாபம் ஈட்டாத தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன.
ஹார்வர்ட், ஒக்ஸ்போட், கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களை இலாப நோக்கமற்ற பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கலாம். கொத்தலாவல பல்கலைக்கழகம், NSBM பசுமைப் பல்கலைக்கழகம், SLIIT நிறுவனம் போன்றவையும் இலாப நோக்கமற்றவை. சிலர் இவற்றை பட்டங்களை விற்பனை செய்யும் கடைகள் என்று கூறினர்.
அப்படியானால், கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட், ஒக்ஸ்போட் பல்கலைகழகங்களும் பட்டங்களை விற்கும் கடைகளா? அந்த மனப்பான்மையால்தான் இந்நாட்டின் அரச பல்கலைக்கழகங்கள் வீழ்ச்சியுற்று வருகின்றன.
எனினும், இவற்றை நாம் மேலும் மேம்படுத்த வேண்டும். அன்று இருந்தது போன்று இன்று பல்கலைக்கழகங்கள் இல்லை. இன்று பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குழுக்கள் உள்ளன.
அந்தக் குழுக்கள் ஒரு சர்வாதிகாரத்தைப் போல மாணவர்களைக் கையாளுகின்றன. இத்தகைய சூழலில் கற்பிக்கும் விரிவுரையாளர்களைப் பாராட்டுகிறேன். பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களை பட்டங்களை விற்கும் கடைகள் என்ற கேவலமான பேச்சுக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது.
முறையான கல்வி நிறுவனங்கள்
பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி கற்கும் வகையில் இந்நாட்டில் உள்ள பல்கலைக்கழக முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
நாளை முதல் சமூக வலைதளங்களில் இதனைச் சொல்லி என்னைக் குறை கூறலாம். பல்கலைக்கழகத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பல்கலைக்கழகக் கட்டமைப்பில் இருந்து அச்சுறுத்தும் அரசியலை அகற்ற வேண்டும்.
பல்கலைக்கழகத்திற்குள் தங்களுக்கு விருப்பமான கற்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நமது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சீர்குலையாமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற வேண்டும். இப்பல்கலைக்கழகம் அபிவிருத்தியடைந்தால் ஏனைய பல்கலைக்கழக கட்டமைப்புகளும் அபிவிருத்தியடையும் என்று எதிர்பார்க்கின்றேன்.
மேலும், இது போன்ற பல பல்கலைக் கழகங்கள் இன்னும் உருவாகும் என்று எதிர்பார்க்கின்றேன். இந்நாட்டில் உயர்கல்விக்காக விசேட பணியை ஆற்றிய லலித் அத்துலத்முதலி பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உட்பட நான்கு கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |