கோவிட் விடயத்தில் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் - இம்ரான் எம்.பி
கோவிட் தொற்றிலிருந்து அரசு மக்களைப் பாதுகாக்கும் என்ற விடயத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதனால் தாமே சில முடிவுகளை எடுத்து வருகின்றனர் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கோவிட் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகின்றது. நாளாந்தம் தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கையும், மரணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் வைத்திய வசதிக்காக அல்லல்படுகின்றனர். இதனைக் கவனத்தில் கொண்டு வைத்தியர்களும் ஏனைய சுகாதாரப் பகுதியினரும் சில நாட்களுக்காவது நாடு முடக்கப்பட வேண்டும்.
அதன் மூலம் கோவிட் தொற்றையும், கோவிட் மரணங்களையும் குறைக்க முடியும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
எனினும் இவற்றை அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை. கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. அதற்கான திட்டங்களும் அரசிடம் இல்லை.
இதுவே கோவிட் தொற்று அதிகரிப்புக்கும், கோவிட் மரண அதிகரிப்புக்கும் காரணமாகும். எனவே இந்த அரசு மக்களைப் பாதுகாக்கும் விடயத்தில் மிகவும் பலவீனமாக உள்ளது என்பதை உணர்ந்த மக்கள் அரசில் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
இதனால் ஆங்காங்கே பிரதேச ரீதியாக மக்கள் ஒன்றிணைந்து தத்தமது பகுதிகளில் சுய முடக்கத்தை பிரகடனப்படுத்தி வருகின்றனர். இதேபோல பல்வேறு தொழிற்சங்கங்களும் நாடு தழுவிய முடக்கத்தை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றன.
அரசு செய்ய வேண்டிய விடயத்தை இன்று மக்கள் செய்யுமளவுக்கு இந்த அரசாங்கம் மிகவும் பலவீனப்பட்டுவிட்டது. நாட்டை நிர்வகிக்கும் இந்த அரசியல் தலைமைகளின் குடும்பத்தில் யாரும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படவில்லை. மரணமடையவில்லை.
இதனால் அவர்களுக்கு கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்த குடும்பங்களின் துயரங்களை உணர்ந்து கொள்ள முடியவில்லை. இதுவே இன்றைய பிரதான பிரச்சினைக்கு காரணமாகும்.
அரசாங்கத்தின் இந்த அசமந்த நிலை குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன். உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று மக்களைக் கைவிட்ட அரசாங்கமாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த அரசாங்கத்தை நம்பியிராது தங்களைத் தாமே பாதுகாத்துக்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.