அரசியல் தீர்வின் ஆரம்ப புள்ளியான மாகாணசபையை பாதுகாக்க வேண்டும் - கோ.கருணாகரம்
மாகாணசபையை அரசியல் தீர்வு என முழுமையாக ஏற்காவிட்டாலும் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றோம். அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள உண்மையிலேயே தமிழ் மக்களை, தமிழத் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தினால் நடாத்தப்பட்ட தியாகிகள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் உட்படத் தோழர்களின் 31ம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய கோவிட் நிலைமையில் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சில உறுப்பினர்களுடன் நடைபெறுகிறது.
பத்மநாபா அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத தலைவராக இருந்திருக்கின்றார். இன்றும் கூட அவரது நினைவுகளை, போராட்ட குணாம்சங்களை மறக்க முடியாது.
இவ்வாறான தலைவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் இன்றைய எமது மக்களின் அவல நிலை இப்படி இருந்திருக்காது. ஏனெனில் அவர், அவருடன் இருந்த ஏனைய போராட்ட இயக்கங்களின் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவர்.
போராட்ட இயக்கங்கள் ஒன்றிணைந்து நமது பொது எதிரிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று 1984லே சிந்தித்து டெலோ இயக்கத்தின் தலைவரான ஸ்ரீசபரெத்தினம் அவர்களுடன் இணைந்து ஈழ தேசிய விடுதலை முன்னணியை உருவாக்கியதில் மிகவும் கூடுதலான பங்களிப்பைச் செய்தவர்.
அப்போதைய மூன்று போராட்ட இயக்கங்கள் ஆரம்பத்தில் ஈ.என்.எல்.எப் ஐ உருவாக்கி இருந்தாலும், அதன் இறுதிக் கட்டத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதில் சேர்ந்திருந்தார்கள்.
அந்த நான்கு இயக்கங்களும் மிகக் குறுகிய காலம் நன்றாகப் பயணித்தாலும் போராட்ட இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பிளவுற்று பல உயிர்களையும், மிகத் திறமையான போராட்ட வீரர்களையும், போராட்டத் தலைவர்களை இழந்தோம்.
இறுதியில் தமிழ் மக்கள் இந்த இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டு மிகவும் மோசமான நிலையிலே இருக்கின்றார்கள். 1983ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தின் பின்னர் போராட்ட இயக்கங்கள் அமோகமாக வளர்ந்திருந்தன. போராட்ட குணாம்சங்கள் உள்ள இளைஞர்கள் வடகிழக்கில் நிரம்பியிருந்தார்கள்.
இன்று அந்த நிலை மாறி 1983க்கு முன்பு இருந்த நிலையை விட மோசமான நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். தற்போது போராட்டம் வடக்கு கிழக்கிலே இல்லாவிட்டாலும் அந்தக் காலத்தில் போராட்ட இயக்கங்களாக இருந்தவர்கள் அரசியற் கட்சிகளாக மாறியிருக்கின்றார்கள்.
தேர்தல்கள் பலவற்றில் போட்டியிட்டு அங்கத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். அதே போன்று மிதவாதக் கட்சிகளும் வடக்கு கிழக்கிலே தேசியத்தைக் கருத்தாகக் கொண்டு செயற்படுகின்றார்கள்.
ஆனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அவர்களது உடைமைகள் கபளீகரம் செய்யப்பட்டு, கலாச்சாரங்கள் மழுங்கடிக்கப்பட்டு மிகவும் மோசமாக இருக்கும் இந்தக் காலகட்டத்திலே தமிழ்த் தேசியத்தை விரும்பும் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய ஒரு தேவை எமக்குள்ளது.
1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட மத்திய அரசாங்கத்தினால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் எதிர்காலத்தில் மாகாணசபை முறைமை இருக்குமோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது. இந்த மாகாணசபையைத் தமிழ் மக்கள் தங்களது அரசியற் தீhவு என முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றார்கள்.
அந்த வகையில் அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை
முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதும் தேவையாக இருக்கின்றது.
அந்த அடிப்படையில் உண்மையிலேயே தமிழ் மக்களை, தமிழ்த் தேசியத்தை
நேசிக்கின்றவர்களாக இருந்தால் எங்களது சுயகௌரவத்தை, கட்சியின் வளர்ச்சியை,
சுயநல தனி மனித எண்ணங்களை விடுத்து ஒன்றாக இணைந்து தற்போதைய நிலைமையில்
எங்களது பிரதேசத்தையும், மக்களையும், மாகாணசபை முறைமையையுமாவது காப்பற்ற
முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
