நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை தொடர்பில் 19 வயது இளைஞன் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதுவரை 21 பேர் கைது
இவர்கள் இருவருடன் இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடந்த முதலாம் திகதி வெயங்கொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயதான இந்த சந்தேக நபர் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் கொல்லப்பட்ட ஆடை விற்பனை நிலையத்தின் ஊழியர் எனவும் தல்துவ கூறியுள்ளார்.
தச்சு தொழிலாளி
சந்தேக நபர் நிட்டம்புவை, கும்பல்ஒலுவ பிரதேசத்தை சேர்ந்தவர். சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பஸ்யாலை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான தச்சு தொழிலாளி.
சந்தேக நபர்களிடம் இருந்து கையடக்க தொலைபேசிகள், கொலை சம்பவம் நடந்த தினத்தில் அணிந்திருந்த உடைகளை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.




