கழுதை தேய்ந்து கட்டறும்பாகிய தமிழர் அரசியல்
ஒற்றை ஆட்சியில் இருந்து சமஸ்டி, சமஸ்டியில் இருந்து தனிநாடு, தனி நாட்டில் இருந்து மீண்டும் சமஸ்டி என வந்து இப்போது ஒற்றை ஆட்சிக்குள் ஏதாவது ஒரு தீர்வு பற்றி மிதவாதிகள் பேசத் தொடங்கிவிட்டனர். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் என்று வியாக்கியானமும் செய்கின்றனர். இந்த அரசியல் வரலாற்று குத்துக்கரணங்களை ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்.
ஈழத்தமிழர்களின் அரசியலை ஐரோப்பிய காலனித்தவத்திலிருந்து பார்ப்போமேயானால் யாழ்ப்பாண இராட்சியம் 1621ல் போர்த்துக்கேயரிடம் வீழ்ச்சியடைய தமிழர் நிலத்தின் ஆளுகைகுரிய பெரும் பகுதி ஐரோப்பியரிடம் சென்றது.
அதனைத் தொடர்ந்து வன்னிய குறுநில மன்னர் பனங்காமம் பற்று கைலாயவன்னியர் 1769ல் இறக்க வன்னியபற்றுக்கள் ஒல்லாந்தரின் கைக்கு சென்று விட்டது. வன்னிபற்றுக்களில் இணைந்திருந்த மகாவிலாச்சிபற்று, கொட்டியாரப்பற்று மற்றும் பாணமைப்பற்று ஆகிய மூன்றும் அன்றைய காலத்தில் கண்டியை ஆண்ட தமிழ் மன்னர்களுடன் இணைந்துவிட்டன.
இந்நிலையிலும் ஒல்லாந்தர்கள் இலங்கையின் கரையோரம் முழுவதையும் படிப்படியாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இன்றைய தமிழர் தாயகம் முழுவதிலும் 1798 வரை ஒல்லாந்தர்கள் தனியான நிர்வாக ஆட்சியே நிலவியது.
தமிழர் தேசத்தை யாழ்ப்பாணக் கமாண்ரி என்ற நிர்வாக அலகாக நிர்வகித்தனர். இந்த யாழ்ப்பாணக் கமாண்ரியின் கீழ் புத்தளம், மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை , மட்டக்களப்பு, அம்பாறையின் பானமை வரை நிர்வகிக்கப்பட்டது.
இன்றைய தமிழர் தாயகம் என்பது ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் யாழ்ப்பாண கமாண்ட்ரியின் கீழே இருந்த பிரதேசங்கள்தான். இன்று நாம் பார்க்கின்ற தமிழீழ வரைபடம் யாழ்ப்பாண கமண்ரியினுடைய வரைபடம்தான் என்பதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
இவ்வாறு தமிழர் தேசமும், சிங்கள தேசமும் தனித்தனியாக ஆளப்பட்ட நிலைமை இலங்கை முழுவதையும் ஆங்கிலேயர்கள் 1815இல் கைப்பற்றிய பின்னரும் தொடர்ந்தது.
1833ம் ஆண்டு கோல்புரூக் அரசியலமைப்பின் மூலமே தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு இலங்கைத்தீவு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போதும் கூட தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் ஒவ்வொரு பிரதிநிதிகளே நிர்வாகத்தில் பங்குபெற்றினர்.
இவ்வாறு ஒரு நூற்றாண்டு கடந்த நிலையில் 1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பு ஒற்றை ஆட்சி முறையே கொண்டிருந்ததோடு அரசாங்க சபையில் பெரும்பான்மையினரை முதன்மைப்படுத்துகின்ற இனநாயக அரசியலுக்கு வித்திட்டது. 1936 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மந்திரி சபை ஆட்சி முறையில் தனிச் சிங்கள மந்திரி சபையே 1947 ஆம் ஆண்டு வரை இலங்கையை நிர்வகித்தது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பும் இலங்கை ஒற்றையாட்சி முறைமை தத்துவத்தையே முதன்மைப்படுத்தியதோடு ஒற்றை ஆட்சி முறைமையை பலப்படுத்தவும் உதவியது. இந்தக் காலகட்டத்தில் சேர் பொன் . இராமநாதன், அருணாச்சலம் தொடக்கம் ஜி ஜி பொன்னம்பலம், வன்னியசிங்கம், ராஜமாணிக்கம், எஸ் .ஜே .வி. செல்வநாயகம் வரை அனைவரும் ஒற்றை ஆட்சியை வேண்டி நின்றதோடு அதனை பலப்படுத்தவும் செயற்பட்டார்கள் என்பதை இங்கே மறந்தோ, மறைத்துவிடவோ கூடாது.
1930 களில் இலங்கையில் டி. எஸ். சேனநாயக்கா தலைமை தாங்கி உருவாக்கப்பட்ட மந்திரி சபை நகல் யாப்பிலும் ஒற்றை ஆட்சியே வலியுறுத்தப்பட்டது. அந்த ஒற்றை ஆட்சியை ஏற்றுத்தான் 1944 இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது தமிழ் அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரசும் 1970 ஆம் ஆண்டு தேர்தல் வரை ஒற்றை ஆட்சியையே தொடர்ந்து வலியுறுத்தி நின்றது.
அதே நேரத்தில் 1949 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்துடன் முரண்பட்டு எஸ். ஜெ. வி. செல்வநாயகம் தமிழரசு கட்சியை உருவாக்கினார். அவரும் ஆரம்பத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார். ஆனால் சமஷ்டி கட்சியை ஆரம்பித்ததன் மூலம் ஒற்றை ஆட்சியில் இருந்து விடுபட்டு சமஸ்டி முறை தமிழர்களுக்கு வேண்டும் என்ற நிலைக்கு வந்தார்.
தமிழ் தரப்பினர் யாரும் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை பற்றியோ தனியான அரசியல் நிர்வாக ஒழுங்கு பற்றியோ, சுயாட்சி பற்றியோ பேசாதிருந்தபோது சிங்கள இடதுசாரிகளும், பண்டாரநாயக்காவும் சமஸ்டிபற்றி பேசினார்கள். தமிழ அரசியல் தலைமைகள் யாவரும் நாடாளுமன்றத்துக்குள் ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை பெறலாம் என்று காலமெல்லாம் நாடாளுமன்றத்துக்குள் விவாதங்களையும் பேச்சுப்போட்டிகளையும் நடத்தி எந்தப் பயனையும் அடைந்ததில்லை.
இத்தகைய அரசியல் தலைவர்கள் 1972 ஆம் ஆண்டு சிங்கள மொழியையும், பௌத்த மதத்தையும் முதன்மைப்படுத்தி ஒற்றை ஆட்சியை வலுவாகிய ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்காவினுடைய அரசியல் யாப்பின் பின்னர்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியே தமிழர் பிரச்சினையை அணுக வேண்டும் என்ற நிலைக்குச் சென்றார்கள். தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை பற்றி சிந்திக்கவும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குமான ஒரு தொடக்கப் புள்ளியாகவும் இந்த முதலாம் குடியரசு யாப்பு அமைந்திருந்தது.
இலங்கைத் தமிழர் அரசியலில் 1936ம் ஆண்டிலிருந்து 1956ம் ஆண்டு வரை தமிழர்களின் தலைவராக ஜிஜி பொன்னம்பலம் இருந்தார். 1956ம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரசை தோற்கடித்து தமிழரசு கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெற்றதுடன் செல்வநாயகம் தமிழர்களின் தலைவராக 1976ம் ஆண்டு வரை இருந்தார்
1970 ஆம் ஆண்டு தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மூன்று ஆசனங்களை பெற தமிழரசுகட்சி 13 ஆசனங்களை பெற்றது. அதே நேரத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் அருளம்பலமும், தியாகராஜாவும் சுதந்திரக் கட்சிக்கு கட்சி தாவியதும் ஆனந்தசங்கரி மட்டுமே காங்கிரஸின் ஒரே ஒரு உறுப்பினராக இருந்தார்.
அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியினுடைய செயலாளர் சிவசிதம்பரமும், தமிழரசு கட்சியினுடைய செயலாளர் அமிர்தலிங்கமும் தோல்வியடைந்து இருந்தனர். தோல்வி அடைந்த இரு செயலாளர்களும் தற்செயலாக கொழும்புக்கான பயணத்தின் போது பலாலி விமான நிலையத்திலிருந்து ஒன்றாக பயணிக்க நேர்ந்த போது ஏற்பட்ட உரையாடல்களின் விளைவாக இருவரும் தம்மை அரசியலில் மீண்டும் நிலை நாட்டுவதற்கு வழியொன்று கிடைத்தது.
அதே நேரத்தில் அந்திமக்காலத்தை எட்டியிருந்த எஸ் ஜே. வி. யும், ஜி.ஜியும் கைகோர்ப்பதன் மூலம் பரஸ்பரம் இரு தலைவர்களும் சம அந்தஸ்தை பெற முடியும். இரு செயலாளர் இரு தலைவர்களும் எதிர்காலத்தில் நன்மையடைய கூடிய வாய்ப்புகளும் இருந்தன் பிரகாரமே இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸையும் இணைத்து 04-05-1972 தமிழ் ஐக்கிய விடுதலை கூட்டணி உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கும் ஒரு ஒன்றிணைந்த அரசியல் தேவைப்பட்டதனால் தமிழ் மக்களும் இதனை ஆதரித்தார்கள்.
தமிழர் ஐக்கிய கூட்டணி பின்னாளில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து வட்டு கோட்டை தீர்மானத்தை பிரகடனப்படுத்துவதற்கு சற்று முன்னர் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தக் கூட்டணியில் இருந்து விலகிச் செல்ல காங்கிரஸும் தமிழரசும் இணைந்து 1976 தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினர். அந்தக் கூட்டணியே வட்டுக்கோட்டை தீர்மானத்தை பிரகடனப்படுத்தியதோடு அதன் மூலம் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் பெரு வெற்றியையும் பெற்றார்கள்.
இத்தேர்தலில் தமிழீழ தனியரசிற்கான மக்கள் ஆணை என்றே தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்தார்கள். தேர்தல் வெற்றியின் பின்னர் இடைக்கால தனியரசு அமைப்போம் என்றும், அதில் இடைக்கால நாடாளுமன்றமும், அமைச்சரவையும் உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். எனவேதான் அத்தேர்தலில் பின்னாளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் முன்னணி போராளிகளும் தமிழர் விடுதலை கூட்டணிக்காக எல்லா பேசி மக்களை அணி திரட்டினார்கள். அதனால்தான் 99 வீதமான தமிழ்மக்கள் தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளித்து வாக்களித்தனர்.
வெற்றி பெற்றதன் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்திற்கு செல்வதற்காக அல்ல என்பதையும் இந்த தருணத்தில் தமிழரசு கட்சிக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் நினைவுபடுத்துவது அவசியமாகிறது.
ஆனாலும் தேர்தலின் வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் சென்று நாடாளுமன்ற சகதிக்குள் புதைந்து போய்விட்டார்கள். இந்த சீரழிவின் பின்னணியில்தான் தமிழ் இளைஞர்கள் நாடாளுமன்ற அரசியலை வெறுத்து தமிழர்களுக்கான ஒரு தனி நாட்டை உருவாக்குவதற்கான ஆயுதப் போராட்டத்தை முழு மூச்சுடன் முன்னெடுத்தார்கள். அந்தப் போராட்டத்தின் முதல் படிக்கல்லாக 1983 ஆம் ஆண்டு ஜூலை திருநெல்வேலி தாக்குதல் அமைந்தது.
அந்த தாக்குதலை அடுத்து இலங்கையில் ஒரு பெரும் இனப்படுகொலை நிகழ்ந்தது. இதன் விளைவாக இலங்கை ஒற்றை ஆட்சியை, அதன் ஆழ்புல எல்லையை, இறைமையை பாதிக்கக் கூடியவாறு தனிநாடு கோருவதோ, பிரிவினை கோருவதோ, தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஒற்றை ஆட்சியை பலமாக நிலைநிறுதுவதற்குமாக ஆறாம் திருத்தச் சட்டம் 08-08 1983ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் தமிழ் இளைஞர்களுடைய ஆயுதப் போராட்டம் இரண்டு வருடத்திற்குள் 1985ல் யாழ்குடா நாட்டை போராளிகளின் கட்டுப்பாட்டுக்கள் முழுமையாக கொண்டுவரும் அளவிற்கு தனிநாட்டுக்கான போராட்டம் முழுவீச்சு பெற்றுவிட்டது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
நாடாளுமன்ற அரசியலை புறந்தள்ளி ஆயுத வழியில் போராடி தமிழர்களுக்கான தனிநாட்டை உருவாக்குவதையே இலக்காகக் கொண்ட. போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர் தியாகத்தினால் 2000 ஆண்டு இலங்கைத் தீவில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான ராணுவச் சமநிலை சமநிலை ஏற்பட்டது.
அதன் விளைவாகத்தான் 2002 ஆண்டு நோர்வே அரசின் மத்திய ஸ்தத்துடன் கொண்டுவரப்பட்ட சமாதான உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம்தான் 2004ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் முதன் முதல் தேர்தலை எதிர்கொண்டனர். இத்தேர்தலை சர்வதேசத்திற்கும் சிங்கள அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் விடுதலைப் புலிகள் மக்கள் ஆதரவு பெற்ற ஒரு பேரியக்கம் என்பதனை நிரூபிப்பதற்கும் நிலைநாட்டுவதற்காகவே பங்குபற்றினர். அத்தேர்தலில் தமது தரப்பினராக வெள்ளைப் புலியை உருவாக்கினர். அதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
அதில் முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களும், மிதவாத அரசியல் வாதிகளையும் உள்ளடக்கி தமது பிரதிநிதிகளாக அவர்களை தேர்தலில் போட்டியிட வைத்து பெருவெற்றியையும் பெற்றிருந்தனர். இந்த வெற்றியை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்துக்குள் எதனையும் சாதிக்கலாம் என்று விடுதலைப்புலிகள் ஒரு எள்ளளவும் எண்ணியது கிடையாது. ஏனென்றால் தமிழ் தரப்பின் 22 ஆசனங்களை வைத்துக்கொண்டு 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்துக்குள் எதனையும் சாதிக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
எனவேதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது விடுதலைப் புலிகளைப் பொறுத்தளவில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஓர் அரசியலைச் செய்வதற்கான ஒரு அங்கீகாரம் மட்டுமே. விடுதலைப் புலிகளை பொறுத்த அளவில் இலங்கை நாடாளுமன்றத்தை ஒரு பொருட்டாக மதித்ததே கிடையாது. இதனை பிரித்தானியாவில் அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் ஐ ஆர் ஏ ஆயுதவழியில் ஒரு பகுதியினரும் அரசியல் வழியில் சின்பின் (Sinn fein) இன்னொரு பகுதியுமாக இரட்டை தண்டவாளம் போன்று அவர்கள் பயணித்தமைக்கு ஒப்பானதாக சொல்லலாம்.
ஆனால் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின்னர் தமிழ் தேசிய அரசியல் என்பது சீரழிந்து சின்னா பின்னப்பட்டுப் போய்விட்டது. இப்போது நாடாளுமன்ற அரசியலில் எதனையும் சாதிக்க முடியாமல் தோல்வியடைந்த தமிழரசு , தமிழ் காங்கிரஸ் என்ற கட்சிகள் தமது பழைய அரசியல் நிலைப்பாட்டுக்குச் சென்று புதிய சட்டிக்குள் புளித்துப்போன பழைய கூழாக தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்யத் தலைப்பட்டுவிட்டனர்.
ஆனால் சிங்கள அரசியலில் பாரம்பரிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி இரண்டும் சீழ் பிடித்து அழுகி விழுந்துபோக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மக்கள் சக்தியும், சுதந்திரக் கட்சியில் இருந்து மொட்டுக் கட்சியும் முளைத்தெழுந்திருக்கின்றன. சிங்கள மக்கள் தமது அரசியலை காலத்தின் தேவைக்கேற்ப சீழ் பிடித்த கட்சிகளில் இருந்து விடுபட்டு புதிய கட்சிகளை வலுப்படுத்தி அரசியலில் ஒரு படி முன்னே நகர்ந்து இருக்கிறார்கள்
ஆனால் தமிழ் மக்கள் மத்தியிலோ புளித்துப்போன , தோல்வியடைந்த, சீரழிந்த கட்சிகள் மீண்டும் சமஸ்டி என்ற முகமூடியை அணிந்து கொண்டு களத்தில் நிற்கின்றன. இந்த இரண்டு கட்சிகளும் தமிழர் அரசியல் வரலாற்றில் நாடாளுமன்ற அரசியலுக்குள் எதனையும் சாதித்தது கிடையாது. ஆனால் இப்போது ஏதோ நாடாளுமன்ற அரசியலுக்குள் சாதித்துவிடலாம் என்று போக்கு காட்டி குண்டான் செட்டிக்குள் மீண்டும் குதிரை ஓட்டுகின்றன. இதுவே இன்று தமிழர்களுடைய துயரகரமான அரசியலாக காணப்படுகிறது. இதனை கடந்த கால வரலாற்றின் கட்சி தலைவர்கள் என்று பார்க்காமல் இதனை இரண்டு அரசியல் கட்சிகளினதும் போக்காகவே அடையாளம் காணவேண்டும்.
இன்று தமிழ்த் தேசிய அரசியல் பேசும் மூன்று அரசியல் கட்சிகளும் முன்வைக்கின்ற தமிழர்களுக்கான தீர்வு திட்டம் என்பது தனியரசிலிருந்து குத்துக்கரணம் அடித்து சமஸ்டி என்பதனையே முன்வைக்கிறார்கள். இந்த சமஸ்டியை பேசுவதன் மூலம் இந்தக் கட்சிகள் நாடாளுமன்ற ஆசனங்களை பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று நாடாளுமன்ற உறுப்புக்கான சலுகைகளைப் பெற்று தாமும், தம் குடும்பமும், குட்டியுமாக எதிர்கால அரசியலில் தொடர்ந்து பணம் பண்ணும் பாசாங்கு அரசியலைச் செய்வதற்காகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் அந்த முயற்சியிலேயே முனைப்பு காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களினால் நாடாளுமன்றத்துக்குள் தமிழ் மக்களுக்காக எதனையும் சாதித்து விட முடியாது.
இப்போது தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன என்னவெனில் தமிழ் மக்களுக்கான ஒரு தேசிய மகா சபையை உருவாக்கி அதன் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதுதான்.