ரணில் வழக்கை முன்னிறுத்தி சட்டமா அதிபருக்கு அரசியல் சதி.. விஜயதாஸ ராஜபக்ச குற்றச்சாட்டு
ரணில் விக்ரமசிங்கவின் இலண்டன் பயணம் குறித்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபர் மீது அரசியல் முத்திரை குத்தி அவரைப் பதவி நீக்க முயற்சிப்பது நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகும் என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
சட்டமா அதிபருக்கு எதிரான போராட்டம் மற்றும் கணக்காய்வாளர் நியமனம் தாமதப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் ஊடகங்களிடம் தெளிவுபடுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "கடந்த தேர்தல்களில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடனேயே இந்த அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர்.
தேர்தலுக்கு முன்னர் அரஅது வழங்கிய பிரதான வாக்குறுதிகளில் ஒன்று சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதாகும். ஆனால் அந்த வாக்குறுதியை வழங்கிய ஜனாதிபதியும் இந்த அரசும் கணக்காய்வாளர் நாயகத்தை எப்போது நியமிக்கப் போகின்றனர் என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
நீதித்துறையின் நிலை
இடம்பெறும் சகல ஊழல், மோசடிகளையும் மறைப்பதற்கான சிறந்த முறைமையை அரசு தேர்ந்தெடுத்துள்ளது. கணக்காய்வாளர் இன்றி நாட்டை ஆட்சி செய்வதே அந்த முறைமையாகும். அரசமைப்புக்கமைய கணக்காய்வாளர் இன்றி நாட்டில் ஆட்சியை முன்னெடுக்க முடியாது.

அதேபோன்று அரசமைப்புக்கமைய பிரதம நீதியரசர் ஒருவர் இன்றி ஒரு நாள் கூட நாட்டில் ஆட்சியை முன்னெடுக்க முடியாது. பிரதம நீதியரசர் இல்லாவிட்டால் ஒட்டுமொத்த நீதித்துறை கட்டமைப்பும் செயழிலக்கும்.
இந்த வரிசையில் சட்டமா அதிபரும் கணக்காய்வாளரும் இன்றி நாட்டில் ஆட்சி இடம்பெறாது. மாறாக இவர்கள் இன்றி முன்னெடுக்கப்படும் ஆட்சி ஜனநாயகத்துக்கு முரணானதாகும்.
கணக்காய்வாளர் பதவிக்குத் தகுதியான ஒருவரைப் பெயர் குறிப்பிட முடியாத நிலைமை அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்பதன் மூலம் அதன் பலவீனம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காகச் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் செயழிலக்கச் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காக அரசின் ஆதரவாளர்களை ஏற்பாடு செய்து போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
அரசியல் கலாசாரம்
எமது நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடம்பெறாத ஒழுக்கக்கேடான அரசியல் கலாசாரத்தின் ஆரம்பமாகவே சட்டமா அதிபரைப் பதவி நீக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போதைய சட்டமா அதிபர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உதவியாள் எனக் கூறியே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால்தான் இந்தச் சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டார்.
அவரது பெயரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசமைப்புப் பேரவைக்குப் பரிந்துரைத்த போது, அதன் உறுப்பினர்கள் எவரும் அதற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை.
இந்நிலையிலேயே இந்த அரசு அவர் மீது அரசியல் முத்திரை குத்தி அவரைப் பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கின்றது. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். ரணில் விக்ரமசிங்கவின் இலண்டன் பயணம் குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வேறுபட்ட நிலைப்பாடு காணப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
இந்த வழக்கில் மாத்திரமல்ல, எந்தவொரு வழக்கிலும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம். வழக்கறிஞர்கள் ஐவர் இருந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திப்பர். அந்தவகையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ளக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனைச் சட்டமா அதிபர் திணைக்களமே உள்ளகக் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொள்ளும். அதனை விடுத்து போராட்டக்காரர்களின் தேவைகளுக்கேற்ப சட்டமா அதிபரைப் பதவி நீக்கம் செய்ய முடியாது.
சட்டமா அதிபரின் தீர்மானத்துக்கு அப்பால் அரசால் செயற்பட முடியாது. மாறாக சட்டமா அதிபரின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்துவதாயின் அதற்கு நீதிமன்றத்தை நாட முடியும். அதனை விடுத்து போராட்டங்கள் ஊடாக சட்டமா அதிபரை இழிவுபடுத்துவதானது நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகும்." - என்றார்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam