சேனாதி, மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஆவி
1965க்குப் பின்னரான காலகட்டம் என்பது இலங்கை முழுவதிலும் தீவிரமான அரசியல் நிலைப்பாடுகள் கருக்கொண்ட ஒரு காலகட்டம் ஆகும். சிங்கள மக்கள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்திற்கான கருக்கள் உற்பத்தியாகிய ஒரு காலகட்டம். இக்கால கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மாவை.
இப்போதுள்ள தமிழரசு கட்சித் தலைவர்களில் நீண்ட காலம் சிறையிருந்தவர் மாவைதான். இப்படிப் பார்த்தால் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான மிதவாத அரசியல், ஆயுதப் போராட்ட காலகட்ட மிதவாத அரசியல், ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான மிதவாத அரசியல் ஆகிய மூன்று காலகட்டங்களின் ஊடாகவும் வந்தவர் மாவை. அதனால்தான் ஆயுதப் போராளிகள் மத்தியில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள்.
தமிழ் மிதவாத தலைமைகளுக்கும் ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்த காலகட்டங்களிலும் மாவை ஆயுதப் போராட்டத்தால் அதிகம் அச்சுறுத்தப்படவில்லை. அதற்கு அவருடைய குண இயல்பே காரணம்.
மாவை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சியை கூட்டமைப்புக்குள் கொண்டுவர உழைத்தவர்களில் மாவை முக்கியமானவர். நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகள் நடந்த காலகட்டத்தில், வன்னியிலிருந்த கருநிலை அரசு, ஒப்பீட்டளவில் நம்பிக் கதைக்கின்ற தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவராக மாவை காணப்பட்டார்.
உயரமானவர் பெருந்தேகி, பொறுமைசாலி, யாராலும் எளிதாக அணுகப்படக் கூடியவர், யாரையும் பகைக்க விரும்பாதவர். எல்லாவற்றையும் எல்லாரையும் சமாளித்துக் கொண்டு போகக்கூடியவர். அதுதான் சமாளிப்பு அவருடைய பலம் அதுதான் அவருடைய பலவீனமும்.
2009க்குப் பின்னரான தமிழ் அரசியல் என்பது ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான ஒரு மிதவாத அரசியல். அது ஆயுதப் போராட்டத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் புதிய நிலைமைகளைக் கையாள்வதற்கான ஒரு புதிய பண்புருமாற்றத்தைக் (transformation) கோரி நின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது அவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட பண்புரு மாற்றத்தைப் பிரதிபலிப்பாகவும் இருந்தது. ஆனால் 2009 இற்குப் பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்குத் தலைமை தாங்க சம்பந்தரால் முடியவில்லை.சேனாதியாலும் முடியவில்லை. “சேனாதி” அப்படித்தான் சம்பந்தர் அவரை அழைப்பார்.
ஆயுதப் போராட்டமானது சிங்கள மக்களைப் பகை நிலைக்குத் தள்ளி விட்டது என்று சம்பந்தர் நம்பினார்.எனவே சிங்கள மக்களின் பயத்தை, சந்தேகங்களை நீக்குவதன் மூலம்தான் ஒரு புதிய யாப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம் என்றும் அவர் நம்பினார்.அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர் கட்சிக்குள் புதியவர்களைக் கொண்டு வந்தார். தன்னுடைய வழிக்குக் குறுக்கே நின்றவர்களை அகற்றினார். அல்லது அவர்கள் அகன்று போகத் தேவையான நிலைமைகளை ஏற்படுத்தினார்.
ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான மிதவாத அரசியலைக் குறித்து சரியாகவோ அல்லது பிழையாகவோ சம்பந்தரிடம் ஒரு தீர்மானம் இருந்தது. சம்பந்தர் இழுத்த இழுப்புக்கெல்லாம் சேனாதி விட்டுக் கொடுத்தார். அதனால்,சம்பந்தரின் தவறுகளுக்கு அவரும் பங்காளியானார்.
கட்சிப் பிளவு
சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவராக தோல்வி அடைந்த பொழுது சேனாதி தமிழரசு கட்சியின் தலைவராக தோல்வியடைந்தார். சம்பந்தரிடம் நல்லதோ கெட்டதோ தலைமைத்துவ பண்பு இருந்தது.ஆனால் மாவை சேனாதிராஜாவிடம் அது இருக்கவில்லை. சமாளிப்பதால் அவர் பெரும்பாலானவர்களுக்கு விருப்பமானவராக இருந்தார். ஆனால் கட்சியைக் கட்டிக் காக்க முடியவில்லை.
இறுதி நாட்களில் நினைவு தடுமாறிய பொழுதுகளில் அவர் தன்னுடைய மகனுக்கு கூறிய வசனங்களில் ஒன்று “வழக்குக்குப் போக வேண்டும். ஃபைல் களை எடுத்து வை” என்பதுதான். ஒரு மூத்த மிதவாதி அவருடைய மரணத் தறுவாயில் நீதிமன்றம், வழக்கு என்று தத்தளிக்கும் மனதோடு உலகை விட்டுப் போயிருக்கிறார். மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் அவருடைய ஆவி தத்தளிக்குமா?இரண்டு அணிகளாகப் பிளவடைந்த ஒரு கட்சியை அவர் விட்டுப் போயிருக்கிறார்.
இப்பொழுது கூட்டமைப்பும் இல்லை தமிழரசுக் கட்சியும் ஒரு கட்டுக்கோப்பான நம்பிக்கையூட்டும் அமைப்பாக இல்லை. கட்சியின் தலைவராக மாவை தன்னுடைய தலைமைத்துவத்தை நிரூபித்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இன்னொரு விதமாகச் சொன்னால் அவரால் செய்ய முடியவில்லை.
ஏனென்றால் அவரிடம் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்குப் பின்னரான மிதவாத அரசியலை வழிநடத்தத் தேவையான தரிசனங்களும் இருக்கவில்லை கொள்ளளவும் இருக்கவில்லை. சம்பந்தரிடமும் இருக்கவில்லை. இப்போது உள்ள பெரும்பாலான தலைவர்களிடமும் அது இல்லை.
மாவையின் தோல்வி என்பது தமிழ் மிதவாத அரசியலின் தோல்வியும்தான். ஏனென்றால், ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்குத் தலைமை தாங்கத் தேவையான மிதவாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் போதிய அளவுக்கு எழுச்சி பெறவில்லை. ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான மிதவாத அரசியல் எனப்படுவது ஆயுதப் போராட்டத்திற்கு தலைகீழாக எழுச்சி பெற்றிருக்கிறது. ஆயுதப் போராட்டத்தில் அர்ப்பணிப்பும் தியாகமும்தான் அடிப்படைத் தகுதிகளாக இருந்தன.
ஆனால் 2009க்குப் பின்னரான மிதவாத அரசியலானது பெருமளவுக்குப் பிழைப்பாக மாறிவிட்டது. இந்தச் சீரழிவுக்கு மாவையும் பொறுப்பு. கட்சிக்குள் துணிச்சலான முடிவுகளை அவர் எடுத்திருந்தால் தமிழரசுக் கட்சி இப்படி ஒரு சீரழிவுக்கு வந்திருக்காது. அவருடைய சமாளிக்கும் பண்பு கட்சியைச் சிதைத்தது மட்டுமல்ல, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அவரைத் தோற்கடித்து விட்டது.
சம்பந்தர்
சில ஆண்டுகளுக்கு முன் கடைசியாக அவர் எனது வீட்டுக்கு வந்தபோது அவரிடம் சொன்னேன் “அண்ண ஒரு சன்நியாசி மாதிரி முடிவெடுங்கோ.இனி நாடாளுமன்றத்துக்கோ அல்லது மாகாண சபைக்கோ போறதில்ல என்று முடிவெடுங்கோ.அப்படிப்பட்ட ஆசைகள் இல்லையென்றால் நீங்கள் யாருக்கும் பணியவோ,அல்லது யாரோடும் சுதாகரிக்கவோ வேண்டியிராது.
ஆசைகளில்லாமல் ஓரு சந்நியாசி போல தமிழரசுக் கட்சியை கட்டியெழுப்புவதுதான் ஒரே பணி என்று உழையுங்கோ.அப்படி உழைத்தால் கட்சியும் உருப்படும் உங்களுடைய பெயர் ஏன்றென்றும் மதிக்கப்படும்” என்று.பதில் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.அதற்குப்பின் அவர் என்னிடம் வருவதில்லை.
பொது வேட்பாளருக்காக 2019 ஆம் ஆண்டு அவரை நல்லூர் சின்மயா மிஷினில் சந்தித்த பொழுது அவர் பொது வேட்பாளரை ஆதரிக்கத் தயங்கினார். அவரோடு வந்த சி.வி.கே சிவஞானம் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஆனால் கடந்த நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆண்டு தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுக்குமாறு மாவையைக் கேட்டபோது அவர் சொன்னார்.”பொது வேட்பாளர் ஏன் தேவை என்பதற்கு நீங்கள் கூறக்கூடிய காரணங்களை விட 10 மேலதிக காரணங்களை நான் கூறுவேன்” என்று.
தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிக் கட்டத்தில் அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவாக, வெளிப்படையாகக் காணப்பட்டார். அது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனினும் சுமந்திரன் அணியை எதிர்த்து அவர் துணிச்சலாக வெளிப்படையாக எடுத்த முடிவு அது. அவருக்கு நெருக்கமாக இருந்தவரும் பின்னர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவருமாகிய மன்னாரைச் சேர்ந்த சிவகரன் கூறுவதுபோல வழிப்போக்கர்கள் கட்சிக்குள் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு விட்டார்களா? ஆனால் உண்மையான பொருளில் அவர்கள் வழிப்போக்கர்கள் அல்ல.அவர்களைச் சம்பந்தரே தனது வழியைப் பலப்படுத்துவதற்காகக் கட்சிக்குள் கொண்டு வந்தார்.
அவர்கள் மிக நீண்ட மிதவாதப் பாரம்பரியத்தைக் கொண்ட மாவையை அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே தோற்கடித்து விட்டார்கள்.அவருடைய வயதில் அரை மடங்கு வயதை கொண்ட கட்சி உறுப்பினர்கள் அவரை அவமதித்தார்கள்.
ஆனால் அவருடைய உடலுக்கு பெரும்பாலும் எல்லாக் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் மதிப்பளித்தார்கள். சம்பந்தரைப் போலவே மாவையும் ஒரு தோல்வியுற்ற தலைவராகவே இறந்தார். ஆனால் சம்பந்தர் அளவுக்கு அவர் தமிழ்த் தேசிய ஆன்மாவுக்குத் தூரமானவர் அல்ல.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 03 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.