சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப மைத்திரியும் தயாசிறியும் விரட்டப்பட வேண்டும்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் கட்சியில் இருந்து விலகும் வரை கட்சியை மீள கட்டியெழுப்ப முடியாது என சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள திருடர்கள் விலகிச் சென்றால், அல்லது மக்கள் விரட்டியடித்தால், கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் கட்சியில் மீண்டும் இணைவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, மீண்டும் கட்சியில் இணையுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள அழைப்பு தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள சந்திரிக்கா,
புதிதாக கட்சியில் இணையும் தேவை எனக்கில்லை. நான் கட்சியின் உறுப்பினர், கட்சியின் சிரேஷ்ட ஆலோசகர். மைத்திரிபால சிறிசேன, என்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபை மற்றும் அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கினார்.
மீண்டும் கட்சிக்கு வரும்படி கூறுவதால், மீண்டும் போய் சேரும் அளவுக்கு தான் வெட்கம் இல்லாதவள் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் தலைவர்கள் மாத்திரமல்லாது அரசியல் கட்சிகளும் தற்போது நெருக்கடியான நிலைமைகளை எதிர்நோக்கி வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.