மக்களின் நடவடிக்கையால் ஏற்படும் அபாய நிலை - வீடுகளில் வசிப்போருக்கான அவசர அறிவுறுத்தல்
வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைப்பவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர்.
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக மேற்கொள்ளப்படும் குறித்த நடவடிக்கைகளால் பதிவாகும் திருட்டு சம்பவங்களைத் தடுப்பதற்காக வீட்டு உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பு
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், வெப்பநிலை அதிகரித்து வருவதால் பல குடியிருப்பாளர்கள் காற்றோட்டத்திற்காக இரவில் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைக்கின்றனர்.
இந்நிலையில், இத்தகைய பழக்கவழக்கங்கள் குற்றவாளிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். வசதிக்காக பாதுகாப்பை புறக்கணிக்க கூடாது. வீட்டு உரிமையாளர்கள் உறங்கச் செல்வதற்கு முன், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கை
காற்றோட்டத்திற்காகத் திறந்து வைக்கப்படும் ஜன்னல்களில் பாதுகாப்பான உலோகக் கம்பிகளைப் பொருத்துதல், அனைத்துக் கதவுகளும் வாயில்களும் சரியாகப் பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்தல் மற்றும் ஊடுருபவர்களைத் தடுப்பதற்காகப் போதுமான வெளிப்புற விளக்குகளைப் பராமரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது நபர்கள் குறித்து தாமதமின்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தெரிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.