க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ, மாணவியருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பரீட்சைகளின் நிறைவின் பின்னர் மாணவ, மாணவியர் அமைதியான முறையில் வீடுகளுக்கு செல்ல வேண்டுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சைகளின் நிறைவின் பின்னர் பரீட்சை நிலையத்தில் அல்லது பரீட்சை நிலைய வளாகத்தில் மாணவ, மாணவியர் கலகங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கலகங்களில் ஈடுபட்டாலோ அல்லது ஏனைய மாணவ, மாணவியருக்கு இடையூறுகளை விளைவித்தாலோ அவ்வாறான மாணவ, மாணவியருக்கு எதிராக பொதுச் சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்கும் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குழப்பம் விளைவிப்போரின் பரீட்சை பெறுபேறுகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சகல பொலிஸ் நிலையப் பொறுப்புதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.