கொழும்பில் காரில் கஞ்சாவை வைக்க முயற்சித்த பொலிஸார்: மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை
போக்குவரத்து பணியில் இருந்த அதிகாரிகள் தாங்கள் பயணித்த காரில் கஞ்சாவை வைக்க முயற்சித்ததாக இளைஞர்கள் குழு ஒன்று குற்றம் சாட்டிய காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சோதனை நடவடிக்கை
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று காலை வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று காரொன்றை சோதனையிட்ட போது இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சுமார் ஐந்து பேர் கொண்ட குழுவுடன் கிராண்ட்பாஸில் இருந்து வருகை தந்த காரை பொலிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
குறித்த சோதனையின் போது, கார் இருக்கையில் கஞ்சா விதைகள் போன்ற பல பொருட்கள் இருப்பதை அவதானித்ததாக தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
எனினும், வாகனத்தில் இருந்த பணத்தைக் கண்டறிந்த, பொலிஸார் பணம் பறிப்பதற்காக அதிகாரிகள் காருக்குள் கஞ்சாவை வைக்க முயன்றதாக இளைஞர் குழு குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், நிஹால் தல்துவ குற்றச்சாட்டை மறுத்துள்ளார். காரில் இருந்தவர்களை கட்டுக்கடங்காமல் நடந்து கொள்ள அனுமதித்ததில் சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் தவறு செய்ததாகக் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, மூத்த அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து குறித்த இளைஞர்களுடன் உரையாடி பிரச்சினையை சுமூகமாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இளைஞர்களின் கருத்துக்கு குறித்த பொலிஸார் எவ்வித பதிலையும் வழங்காமை சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |