வடக்கு மாகாணத்தின் சிரஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல்
காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். அத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்றதைப்போன்று மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கும் ஆளுநர் பணிப்புரைவிடுத்தார்.
வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (10.10.2025) நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், பொலிஸாரின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் இருப்பதாகவும் ஆனாலும் இன்னமும் சில பொலிஸ் நிலையங்களில் மக்களின் முறைப்பாடுகளை ஏற்க மறுகின்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினார். மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.










