பொலிஸ் சார்ஜன்ட்டைத் தாக்கிய பொலிஸார் - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
காலி- மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளால், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்ட சம்பவத்திற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட குறித்த பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு, தனிப்பட்ட இழப்பீடாக மொத்தம் 200,000 ரூபாயை வழங்குமாறு இரண்டு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு
கடந்த 2011 டிசம்பரில், பாதிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட்டின் மனைவியின் வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த நபர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

மீட்டியாகொட காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது, அங்கிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இவரைத் தாக்கியபோது, ஏனைய அதிகாரிகள் இவரைத் தடுத்து நிறுத்தி, சிறைக் கூண்டில் அடைத்து மீண்டும் தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அளிக்கப்பட்ட சிகிச்சை, மருத்துவ சட்ட அறிக்கை மற்றும் 5 பொலிஸ் அதிகாரிகளின் சத்தியக்கடதாசிகள் மூலம் மனுதாரரின் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதியரசர் மேனகா விஜேசுந்தர சுட்டிக்காட்டினார்.