வீட்டில் தனிமையாக இருந்த பொலிஸ் அதிகாரி படுகொலை
கந்தானை பிரதேசத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது வீட்டிலேயே கைகால்களை கட்டி தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தானை வெலிகம்பிட்டிய கந்தவத்தை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கங்காதரன் சங்கரன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். மனைவி சில காலங்களுக்கு முன் இறந்துவிட்டதாலும் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
பெறுமதியான பொருட்கள்
வீட்டில் இருந்த பெறுமதியான தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு சிலிண்டர் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ளதாக சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கந்தானையில் உள்ள வீட்டில் தனது தாத்தாவைப் பார்க்க வந்தபோது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அவரது பேரன் இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அழுகிய நிலையில் சடலம்
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வீட்டின் சமையலறையில் கைகால்கள் கட்டப்பட்டு தரையில் வீசப்பட்ட நிலையில் பாதி அழுகிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.