இதை கட்டாயம் கவனியுங்கள்..! வாகனம் வைத்திருப்போருக்கு பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை
மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கவனக்குறைவாக நிறுத்தி வைப்பதால், அவற்றை குற்றவாளிகள் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர், வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதுடன், அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களும் திருடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பொலிஸார் எச்சரிக்கை
சில சந்தர்ப்பங்களில் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், வாகனத்தை இயக்க நிலையில் வைத்துவிட்டு வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியின் சாவியை வாகனத்திலேயே விட்டுச் செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி குற்றவாளிகள் மிகக் குறுகிய நேரத்தில் வாகனங்களை திருடிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடுகளுக்கு வெளியே வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைப்பதுடன், வீட்டு வளாகத்தின் வாயில் கதவுகளுக்கு பூட்டு போடாமல் இருப்பதால் வாகனங்கள் திருடப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத் திருட்டு
நெரிசல் அதிகமான இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது, அருகிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அது தொடர்பில் தெரியப்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்தும்போது, அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் அல்லது பணியாளரிடம் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த அல்லது மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வாகனம் திருடப்பட்டால், உடனடியாக 119 அல்லது 118 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening