வீடுகளில் தனிமையில் இருக்கும் முதியோர் தொடர்பில் பொலிஸாரின் விசேட அறிவுறுத்தல்!
வீடுகளில் தனிமையில் வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பிள்ளைகள் தொழில் நிமித்தம் வெளியே செல்வது, வெளிநாடுகளுக்குச் செல்வது அல்லது வேறு மாகாணங்களில் குடியேறுவது போன்ற காரணங்களினால், முதியவர்கள் வீடுகளில் தனிமையில் இருக்கும் நிலை அதிகரித்துள்ளது.
இதனைப் பயன்படுத்தி, போதைப்பொருளுக்கு அடிமையான நபர்கள் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கில் இத்தகைய வீடுகளை இலக்கு வைப்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் இக்குற்றச்செயல்கள் கொலைகள் வரை செல்வதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதியவர்களைப் பராமரிக்க வெளிநபர்களையோ அல்லது வீட்டுப் பணியாளர்களையோ பணியில் அமர்த்தும்போது, அவர்களின் பின்னணியை முறையாக ஆராய்ந்து பொலிஸ் அறிக்கையைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவசர உதவிக்காக 119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம் மற்றும் 1990 'சுவசெரிய' (Suwa Seriya) அம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட அத்தியாவசிய தொலைபேசி இலக்கங்களை வீட்டில் இலகுவாகக் கண்ணில் படக்கூடிய இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்பின் அறிமுகமற்ற நபர்களை வீட்டிற்குள் அழைப்பதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். அத்துடன், பெற்றோர் மற்றும் முதியவர்கள் தனிமைப்படுத்தப்படுவதைக் குறைத்து, பிள்ளைகள் அவர்களின் பாதுகாப்பு குறித்து அடிக்கடி அவதானத்துடன் இருக்க வேண்டும்.
தனிமையில் வசிக்கும் முதியவர்கள் குறித்துப் பகுதி கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூகப் பொலிஸ் குழுவிற்கு அறிவித்து வைக்க வேண்டும். மேலும், அயலவர்களுடன் சுமுகமான உறவைப் பேணுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய கையடக்கத் தொலைபேசி ஒன்றை அவர்களிடம் வழங்குவதுடன், இரவு நேரங்களில் வீட்டைச் சுற்றிப் போதிய வெளிச்சம் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
மேற்கூறிய விசேட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, முதியவர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கோரிக்கை விடுத்துள்ளனர்.