வாகரையில் இரு பொலிஸார் இடையே கைகலப்பு: ஒருவர் காயம்
மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் இரண்டு பொலிஸாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதியை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதியை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதவான் பிணையில் நேற்று திங்கட்கிழமை (07.08.2023) விடுவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் வாகனச் சாரதிக்கும் இன்னொரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையே நேற்றுமுன்தினம் (06.08.2023) இரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.
பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம்
இதன்போது பொலிஸ் சாரதி கல்லால் சக பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டார். தாக்கிய பொலிஸ் சாரதியைக் கைது செய்த பொலிஸார், தாக்குதலில் காயடைந்த பொலிஸாரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் சாரதி வாழைச்சேனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது அவரை நீதிவான் பிணையில் விடுவித்தார்.
குறித்த பொலிஸ் சாரதி உடனடியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஒழுக்காற்றுக் குழுவும் விசாரணைகளை முன்னெடுக்கின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |