பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்ட பொலிஸ் அதிகாரி: நீதிமன்று எடுத்துள்ள தீர்மானம்
இரத்மலானை பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி வீதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் அதிகாரி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரத்மலானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பொலிஸ் ஜீப் வண்டியை ஓட்டிச் சென்ற குறித்த அதிகாரி ரத்மலானை நிலைய வீதிக்கு அருகில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியுள்ளார்.
இதன்போது, காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வெளியேறியுள்ளார்.
பிணையில் செல்ல அனுமதி..
குடிபோதையில் வாகனம் செலுத்தி வீதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட அதிகாரி, 100,000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தி மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் 28 வயதுடைய ஹிக்கடுவையைச் சேர்ந்தவர் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |