கிளிநொச்சியில் அதிவேக மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!
கிளிநொச்சி பகுதியில் பொலிஸாரின் விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கையில் 12 அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வீதி விபத்துக்களை தடுப்பதையும், பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நேற்றுமுன்தினமும், நேற்றும் (23, 24) இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 12 அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகள்
இலக்கத் தகடுகள் இன்மை, வீதியில் செல்லும் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், வாகன இலக்கத் தகடுகள் எதுவும் பொருத்தப்படாமல் இயக்கப்பபட்டமை, ஆவணங்கள் இன்மை, மோட்டார் சைக்கிள்களுக்கு உரிய முறையான சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றிச் செலுத்தப்பட்டமை போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் கண்டறியப்பட்டன.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிகளுக்கு முரணாகவும் செயற்படும் வாகன சாரதிகளுக்கு எதிராக இனிவரும் நாட்களிலும் இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.