மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய முயற்சித்த பொலிஸார்
மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது 13ஆவது நாளாக இன்றைய தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் போராட்டம் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு சற்று முன் பெருந்திரளான பொலிஸார் வந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார், போராட்டமானது சுகாதார விதிமுறைகளை மீறி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து இந்த போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு கிடைத்துள்ளதாகவும் கூறி போராட்டக்காரர்களை கைது செய்ய முயற்சித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
என்ற போதும் தமக்கு பொலிஸார் கூறும் வகையிலான எந்த வித தடை உத்தரவும் கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
சம்பவம் தொடர்பில் அறிந்து ஊடகவியலாளர்கள் ஸ்தலத்திற்கு வந்த நிலையில் பொலிஸார் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதி வேண்டி வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமான மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில், அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலிலும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.