சிவனொளிபாதமலை சென்ற 35 பேர் பொலிஸாரால் கைது(Video)
ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக சுற்றுலா பயணிகளை சோதனை செய்த போது பல்வேறு போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற சுமார் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கோட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரேமலால் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் பெற்றோர்கள் இன்றி நண்பர்களுடனும் அயலவர்களுடனும் இணைந்து சிவனொளிபாதமலை தரிசிப்பதற்காக வருகை தந்தவர்கள்.
இவர்கள் சுமார் 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் ஸ்டூவட் என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (18.02.2023)
திகதி கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில்
யட்டிபேரிய பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 12 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, ஹோமாகம, பொலன்நறுவை உள்ளிட்ட நாட்டின் பல பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து கேரள கஞ்சா 50 கிராம், மதன மோதக்க 120 கிராம், 12 போதை மாத்திரை, 500 மில்லிகிராம் ஏஸ் போதைப்பொருள், உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரையும் இன்று (19.02.2023) ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.