தமிழர் பகுதியில் நீண்டகாலமாக கால்நடைகளை திருடி வந்த நபர் கைது
மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆடு ஒன்றை கடத்திச் சென்ற காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(01.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
கடந்த மாதம் 18ஆம் திகதி இருதயபுரம் பகுதியில் வீதி ஓரமாக மேய்ந்து கொண்டிருந்த 5 ஆடுகளில் ஒன்றை குறித்த நபர் சிறிய ரக வான் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளார்.
இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சிசிடிவி கெமரா மூலம் ஆடு கடத்தப்பட்ட வாகனத்தினை அடையாளம் கண்டுள்ளனர்.

பின்னர் பொலிஸார் சம்பவ தினமான நேற்று ஆட்டை கடத்திச் சென்ற திருடனை காத்தான்குடியில் வைத்து கைது செய்துள்ளதுடன் ஆட்டை கடத்த பயன்படுத்திய சிறிய ரக வானையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட திருடன் நீண்ட காலமாக வாகனங்களில் ஆடு மற்றும் மாடுகளை திருடி வருவதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட நபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


