முல்லைத்தீவு குமுழமுனையில் தமிழ் பொதுவேட்பாளரின் பரிதாப நிலை
முல்லைத்தீவு குமுழமுனை சந்தைக்கு முன்பாக தமிழ்ப் பொது வேட்பாளரின் விளம்பர பனர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை வீதியில் பாடசாலைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள பனர் தொடர்பில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அரசியல் ஆர்வலர்கள் சிலரை சந்திக்க முடிந்தது.
தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று உலகுக்கு காட்டும் பிரதான நோக்கத்தினை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கான பிரச்சார முறையின் ஒரு அணுகலாகவே இது இருக்கின்றது.
பனர் கட்டப்பட்டது
பனர் கட்டப்பட்டுள்ள இடம் சுத்தமாக பேணப்பட்டிருக்காத நிலையில், தொடர்ந்து நீண்ட காலமாக அது இருந்து வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் கால பரப்புரைக்காக பனர் கட்டப்பட்டுள்ளது என்ற போதும் அதனை கட்டும் முன்னர் வீதியின் அப்பகுதியை சுத்தம் செய்துவிட்டு அதன் பின்னர் பனரைக் கட்டியிருக்கலாம்.
ஆயினும் அப்படிச் சிந்திக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள் என மேலும் குறிப்பிட்டிருந்தனர்.
குமுழமுனை மகாவித்தியாலயம், சந்தை, குமுழமுனை ஆறாம் வட்டார கிராம சேவகர் அலுவலகம், வியாபார நிலையங்கள் என ஒரு சிறிய நகரத்திற்கான எல்லா கூறுகளையும் ஒருமித்துக் கொண்டிருக்கும் குமுழமுனைச் சந்தியின் ஒரு பகுதியில் கட்டப்பட்ட பனர் குப்பைக் குவியலுக்கு அருகில் கட்டப்பட்டிருப்பது கவலையளிக்கும் விடயமாகும்.
பொருத்தப்பாடான செயற்பாடல்ல
தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்போராலேயே இந்த பனர் கட்டப்படிருக்க வேண்டும்.
அப்படி கட்டும் அவர்கள் தங்கள் கிராமத்தின் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருக்க கூடிய அந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி அந்த இடத்தினை அழகுபடுத்தி விட்டு, தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் அந்த பனரைக் கட்டியிருக்கலாம் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
மக்களுக்கு சேவை செய்வதே அரசியல் பயணத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கும் போது, தேர்தலில் போட்டியிடும் ஒரு போட்டியாளர் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் வீதியின் ஓரமாக குப்பைகள் குவிக்கப்பட்டிருப்பதை கண்டும் காணாமல் கடந்து போவதென்பது பொருத்தப்பாடான நகர்வாக அமையாது.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு வேண்டி அந்த ஒரு இடத்தில் மட்டுமே பனர் கட்டப்பட்டுள்ளது.
அது தவிர்த்து சுவரொட்டிகளோ அல்லது வேறு ஏதேனும் வகையில் பொதுவேட்பாளருக்கான ஆதரவைத் திரட்டும் முகமாக எதுவும் முன்னெடுக்கப்பட்டு இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆதரவை அதிகரித்தல்
வேட்பாளருக்கு பொதுமக்களிடையே மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தவும் அதனை அதிகரிக்கவும் அவருக்கான ஆதரவை திரட்டும் போது நடந்து கொள்ளும் முறைகளும் பங்கு வகிக்கும் என்பது இங்கே கவனிக்கப்படவில்லை.
முதன்மை போட்டியாளர்களும் சரி அல்லது போட்டியாளர்களும் சரி தேர்தல் பரப்புரைகளின் போது பொதுமக்களின் மனங்களை வெறுமனே பேச்சினால் மட்டும் வென்று விடலாம் என்று எண்ணி விடுகின்றனர்.
தேர்தல் கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வருவதில் இருந்து அவர்களை அவர்களது இடங்களுக்கு மீண்டும் கொண்டு சென்று விடுவது வரையும் பொதுமக்களோடு போட்டியாளரும் அவரது செயற்பாட்டாளர்களும் வெளிப்படுத்தும் அணுகுமுறைகளும் மக்கள் மனங்களை வெல்ல உதவி நிற்கும் என தேர்தல் பரப்புரைகளின் போதான வேட்பாளர்களின் அணுகுமுறைகள் தொடர்பில் உளவியல் சார் கற்றலாளர்களுடன் மேற்கொண்ட உரையாடல்களின் போது அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவை பற்றி தமிழ் பொது வேட்பாளரும் அவரது செயற்பாட்டாளர்களும் கருத்தில் எடுக்காமையே குமுழமுனைச் சந்தியில் கட்டப்பட்ட பனர் வெளிப்படுத்தியுள்ள உண்மையாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |