10 மாதங்கள் காத்திருந்து கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட்ட இங்கிலாந்து ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி
பத்து மாதங்களாக இலங்கையில் தங்கியிருந்து கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட்ட இங்கிலாந்து அணியின் தீவிர ரசிகர் ஒருவருக்கு, இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் இன்ப அதிர்ச்சியொன்றை வழங்கியுள்ளார்.
காலியில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட்டுகளினால் வெற்றியீட்டி, போட்டித் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை வகிக்கின்றது.
இந்த நிலையில் காலி கோட்டை பகுதியில் இருந்து போட்டியை பார்வையிட்டு, அணிக்கு உற்சாகமளித்து வரும் ரொப் லுயிஸ் என்ற ரசிகர் தொடர்பில் போட்டியின் முதல் நாள் தொடக்கம் சர்வதேச ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தவுடன் குறித்த ரசிகருக்கு தனது மட்டையை காண்பித்து தனது அன்பை பரிமாறியிருந்தார்.
போட்டியின் நிறைவின் பின்னர், ஜோ ரூட் தொலைபேசி மூலம் லுயிஸை தெடர்பு கொண்டு தமது அணிக்கு வழங்கி வரும் ஆதரவிற்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் போட்டித் தொடர் நடாத்தப்படவிருந்தது. எனினும் கொவிட் நோய்த் தொற்று காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டு இந்த மாதமே நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட் விதி முறைகளுக்கு அமைய போட்டியை மைதானத்தில் பார்வையிட முடியாது என்ற காரணத்தினால் முதன் நாளில் லுயிஸ் காலி கோட்டையிலிருந்து பார்வையிட்டார் அப்போது அவரை காவல்துறையினர் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.
எனினும் இந்த விடயத்தை அறிந்து கொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இரண்டாம் நாள் முதல் போட்டியை பார்வையிட விசேட அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது