ஊடகவியலாளருக்கு எதிரான பொலிஸாரின் திட்டமிட்ட நடவடிக்கை: கிளிநொச்சி ஊடக அமையம் கண்டனம்
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் நவரட்ணம் சதீஸ் என்ற ஊடகவியலாளர் மீது பளை பொலிஸார் திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளும் நடவடிக்கையினை வன்மையாகக் கண்டிப்பதோடு, எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாது இருக்க வேண்டும் என கிளிநொச்சி ஊடக அமையம் கோரியுள்ளது.
கிளிநொச்சி ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 20.05.2022 அன்று பளை பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் சமூக விரோதச் செயற்பாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பொலிஸாருக்கு அறிவித்துவிட்டு சம்பவ இடத்திற்குப் பிரதேச இளைஞர்களுடன் சென்று தடுத்து நிறுத்திய சம்பவத்தின்போது ஊடகவியலாளருக்கு எதிராக இருவர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட இருவரால் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸாரின் நடவடிக்கை
இம்முறைப்பாட்டினை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காது, உள்நோக்கத்துடனும், பழிவாங்கும் எண்ணத்துடன் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸாரின் செயற்பாடுகள் மிகுந்த கவலையினை ஏற்படுத்தியிருக்கிறது.
பொலிஸாரின் இச் செயற்பாடுகள் காரணமாகப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சமூக விரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொதுமக்களும், சமூக நலன் விரும்பிகளினதும் சமூகப் பொறுப்பு எதிர்காலத்தில் தடுத்து நிறுத்தப்படுகின்ற ஆபத்தான நிலைமை உருவாக்கியுள்ளது.
சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஊடகவியலாளரின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் போது சமூகத்தின் ஏனைய தரப்பினர்களும் அடக்கப்படுகின்ற சூழ்நிலையே உருவாகும் என்பதனை வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்துடன் தவறு செய்கின்றவர்கள் மீது சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுவதனை கிளிநொச்சி ஊடக அமையம் எச் சந்தர்ப்பத்திலும் கேள்வி எழுப்பாது.
ஆனால் பழிவாங்கும் எண்ணங்களுடன் சட்டத்தைப் பயன்படுத்துவதனை
நாம் எப்போதும் எதிர்ப்பதோடு, அதனை வன்மையாகக் கண்டிக்கவும் செய்வோம் என
அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.