கொழும்பில் 7 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்: விசாரணை கோருகின்றார் சஜித்
கொழும்பில் உள்ள ஏழு இடங்கள் மீது ஐ.எஸ். குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டம் இருப்பதாக அரச பத்திரிகையொன்றில் வெளியாகிய செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கும், நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மைத்தன்மையைச் சரியாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று(06.10.2023) உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உண்மைத்தன்மை குறித்த விசாரணை
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"சிறைச்சாலையில் இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் இந்தத் தாக்குதல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பாரதூரமான விடயம் என்பதால், இதன் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது என்பதால் கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்று இந்த அபாயம் குறித்து ஆராய வேண்டும்.
அத்துடன் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நாட்டின் சட்டத்தினுள் இயன்ற உச்சபட்ச நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.