நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம்! தமிழர்-சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி: ரவிகரன் காட்டம்
தமிழர், சிங்களவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
பழைய செம்மலை நீராவியடி ஆலய உற்சவத்தின் பின்னர் இன்று(04.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் முல்லைத்தீவினை சேர்ந்தவன் என்பதனால் நீராவியடி பிள்ளையார் ஆலயம் என்பது, நாங்கள் சிறுவயதில் இருக்கும்போது இந்த வீதியால் கொக்குளாய், கொக்குதொடுவாய் பகுதிக்கு சைக்கிளில் செல்லும் போது நீராவியடி பெரிய ஏற்றம் என நாங்கள் நின்று இந்த பிள்ளையாருக்கு கற்பூரம் கொழுத்தி வேண்டி செல்வது வழமை.
நாங்கள் மட்டுமல்ல இதனுடாகச் செல்லும் மக்களும் அப்படிதான்.
இனவாதப் பிரச்சினை
அப்போது இந்த இடத்தில் ஒரு சிங்களவரும் இல்லை ,பௌத்தரும் இல்லை ஆனால் மக்கள் இடம்பெயர்ந்து மீள் குடியமர்த்தப்பட்டதன் பின்னர் இந்த இராணுவ முகாம் இங்கே வந்துவிட்டது.
இராணுவ முகாம்களை ஆங்காங்கே அமைத்து இராணுவ முகாம்களின் துணிவுடன் இனவாத பிக்குகள் ஆதிக்கம் செலுத்தியே இங்கு ஆக்கிரமிப்புக்கள் நடந்துள்ளன.
புத்தர் சொல்லவில்லை ஆக்கிரமிப்பை செய்யுங்கள், என்னை வீதியிலே கொண்டுபோய் இருத்துங்கள் என்று ஆனால் புத்தர் பெயரை சொல்லி இனவாதிகள் பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் பிள்ளையார் இருந்த இடத்தில் புத்தர் சிலையை நிறுவியிருக்கின்றார்கள்.
மக்கள் பிள்ளையாரை வழிபட ஒரு சிறிய இடம் தான் இருக்கின்றது. மக்களின் வழிபாட்டு பாதுகாப்புக்காக ஆலயத்தின் அருகாமையில் கட்டடங்கள் கட்டவிடலாம் நீதிமன்றின் தீர்ப்புக்கமைய பொறுமையோடு காத்து கொண்டிருக்கின்றோம்.
அந்தவகையில் புத்தரின் பெயரைச் சொல்லி இனவாதிகள் தமிழர், சிங்களவர் இடையே பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



