பிள்ளையானின் மறைக்கப்பட்ட கொலைகள் உட்பட பல குற்றங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்
கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியாக நடந்த கொலைகள் உட்பட தொடர் குற்றங்கள் பற்றிய தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியான குற்றங்கள் பற்றிய தகவல்கள் விசாரணைகள் மூலம் வெளிப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், சமூகத்தில் இதுவரை விவாதிக்கப்படாத பல மர்மமான குற்றங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கொலைகள்
மட்டக்களப்பில் பல பொலிஸ் அதிகாரிகள் தங்கள் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிள்ளையான் மீதான விசாரணை, விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்த பின்னர் அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய போராட்டம் மற்றும் அந்தப் போர்க்கால சூழ்நிலையில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் பற்றியது அல்ல என அந்த அதிகாரி கூறினார்.
மட்டக்களப்பு பகுதியில் பிள்ளையான் தலைமையில் பல குற்றங்கள் அவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட இலக்குகளுக்காக நடந்துள்ளதாகவும், தற்போது இந்தக் குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட வழக்கில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
ஆட்கடத்தல்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் உள்ளார்.
விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், பிள்ளையானின் சாரதி கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் பின்னர்தான் தெரியவந்தது.
அதே போல் பிள்ளையானின் வழிகாட்டுதலின் கீழ் செய்யப்பட்ட கொலைகள் உட்பட ஏராளமான குற்றங்களும் இதில் அடங்கும். பிள்ளையானின் சாரதி தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள தெரிவித்துள்ளது.