உயிரிழந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கு உடற்கூற்று பரிசோதனை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் உயிரிழந்து கரையொதுங்கும் ஆமைகள், டொல்பின் மீன்களை அம்பாறை வனஜீவராசிகள் மிருக வைத்திய பிரிவிற்கு அனுப்பி உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும்,குறித்த உடற்கூற்று அறிக்கை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளதாக பிராந்திய சுற்றுவட்ட உத்தியோகத்தர் நாகராசா சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்கரைகளை அண்டிய பகுதிகளில் உயிரிழந்த நிலையில் ஆமைகள்,டொல்பின் மீன்கள் கரையொதுங்கி வருகின்றன.
இன்று காலை முதல் கிரான்குளம்,தாழங்குடா,புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இந்த உயிரினங்கள் கரையொங்கி வருகின்றன. இன்று கிரான்குளம் பகுதியில் மூன்று ஆமைகளும், ஒரு டொல்பின் மீனும் கரையொதுங்கியுள்ள நிலையில், தாழங்குடா பகுதியில் ஐந்தரை அடி நீளமான டொல்பின் மீனொன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் பலத்த காயங்களுடன் கரையொதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்திய சுற்றுவட்ட உத்தியோகத்தர் நாகராசா சுரேஸ்குமார் பார்வையிட்டதுடன், பகுப்பாய்விற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி பேர்ள் கப்பல் தீ பரவியதிலிருந்து இதுவரை 40 இற்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும், 05 டொல்ஃபின்களின் உடல்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




