பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பு - பம்பலப்பிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டை வீசி, ஒருவரை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் ஷிலான் பெரேரா அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி ஆதிமலே பிளேஸ் பகுதியில் வசித்து வரும் ஹூசேமா அப்பாஸ் கென்போய் என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று முன்தினம் காலை, போரா பள்ளிவாசலின் சமையல் அறை மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். எனினும் அது வெடிக்கவில்லை. குண்டு வீசப்பட்ட இடத்தில் 36 கிலோ கிராம் கொண்ட 6 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இருந்துள்ளன.
பெட்ரோல் குண்டு வெடித்திருந்தால் பெரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என பம்பலப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் மீண்டும் வீட்டுக்கு சென்று மற்றுமொரு பெட்ரோல் குண்டை எடுத்து வந்து பள்ளிவாசலுக்குள் வீசியுள்ளார். அதுவும் வெடிக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அறிக்கை ஒன்றை பெறவுள்ளதாக கூறியுள்ள பொலிஸார், தாக்குதல் நடத்தியமைக்கான காரணத்தை சந்தேக நபர் கூறவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
