ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரியை எதிர்த்து உயர்நீதிமன்றில் மனு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்' கீழ் இறக்குமதிப் பொருட்களுக்கு விதித்த கூடுதல் வரிகளை எதிர்த்து, உலகளாவிய போக்குவரத்து நிறுவனமான ஃபெடெக்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
ட்ரம்ப் விதித்த இந்த வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி வரிகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, தாங்கள் செலுத்திய கூடுதல் வரிப் பணத்தை முழுமையாகத் திருப்பித் தருமாறு ஃபெடெக்ஸ் நிறுவனம் தற்போது கோரிக்கை விடுத்துள்ளது.
வழக்குத் தாக்கல்
அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மற்றும் அதன் ஆணையாளர் ராட்னி ஸ்காட் ஆகியோரை எதிர்மனுதாரர்களாகக் கொண்டு இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் இந்த அவசரக்கால சட்டத்தைப் பயன்படுத்தி சுமார் 175 பில்லியன் டொலர் வரை வரி வசூலித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஃபெடெக்ஸ் தவிர, காஸ்ட்கோ, ரெவ்லான் மற்றும் அல்கோவா போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் இந்த வரிக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தை நாடியுள்ளன.
வரிப் பணம்
இதற்கிடையில், வசூலிக்கப்பட்ட வரிப் பணத்தை வட்டியுடன் 180 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி 22 ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் புதிய மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இது குறிப்பாகச் சிறு தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோருகிறது.

இதன்படி, பழைய வரிப் பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பான சட்டப் போராட்டங்கள் பல ஆண்டுகள் நீடிக்கலாம் என்று ட்ரம்ப் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக உள்ளதால், வரிப் பணத்தை மீட்பதில் நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன.