துப்பாக்கிகளை வழங்கியமைக்கு எதிரான மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..
விவசாயப் பயிர்களைப் பாதுகாப்பதற்காக 2024 டிசம்பரில் பாதுகாப்பு அமைச்சினால் துப்பாக்கிகளை வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றையதினம்(10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, விநியோகிக்கப்பட்ட 13,207 துப்பாக்கிகளில் வெறும் 5,000 துப்பாக்கிகளுக்கு மட்டுமே முறையான உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
விசாரணை
வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தினால் (Wildlife and Nature Protection Society of Sri Lanka) தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதியரசர்கள் ரோஹந்த அபயசூரிய மற்றும் கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விவசாய பயிர்ப் பாதுகாப்பு என்ற போர்வையில் கண்மூடித்தனமாக வழங்கப்பட்ட இந்தத் துப்பாக்கிகள், தேசிய பாரம்பரியத்தின் பகுதியாகக் கருதப்படும், கடுமையாகப் பாதுகாக்கப்பட்ட அழிந்துவரும் யானைகளைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படுவதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, 8,207 துப்பாக்கிகள் கணக்கில் வராமல் இருப்பது இந்தத் திட்டத்தின் பாரதூரமான ஆபத்தை வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார்.
"இந்தத் துப்பாக்கிகள் யாருடைய கைகளில் உள்ளன என்பதைக் கண்டறிய முடியாது. இதுவே மனுதாரர் எச்சரித்த ஆபத்து" என்று அவர் தெரிவித்தார்.
நீதிமன்றின் உத்தரவு
எனவே, அதிகாரிகள் மேலதிக துப்பாக்கிகளை வழங்குவதைத் உடனடியாக நிறுத்தி, விநியோகிக்கப்பட்ட ஆயுதங்களை மீட்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

மனித-யானை மோதலை நிர்வகிப்பதற்கான விஞ்ஞானபூர்வமான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதோடு, துப்பாக்கிகளை பெருமளவில் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று கோரும் மீதமுள்ள அம்சங்களுடன் வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க மனுதாரர் விரும்புகிறார்.
மனுதாரர் எழுப்பிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணை பெப்ரவரி 6, 2026 இற்கு ஒத்திவைக்கப்பட்டது.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri