சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்தவர் மரணம்
கொழும்பின் புறநகரான கொட்டாவை பேருந்து நிலையத்திற்கு அருகில் சமையல் எரிவாயு வரிசையில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரிசையில் இருந்த நபருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டதன் காரணமாக அவர் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என கொட்டாவை பொலிஸார் கூறியுள்ளனர்.
63 வயதான மின் பொறியியலாளர்
கொட்டாவை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மின் பொறியியலாளரான 63 வயதான ஜயதிஸ்ஸ பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் கொட்டாவை நகரில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த லிட்ரோ எரிவாயு விநியோகிக்கும் இடத்திற்கு தனது புதல்வருடன் இன்று காலை சென்றிருந்தார்.
எரிவாயுவை பெற்றுக்கொள்ள அதிகளவிலான மக்கள் வந்து வரிசையில் காத்திருந்ததுடன் பெரேரா தனது காரில் அந்த இடத்திற்கு வந்து எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்ய காத்திருந்துள்ளார்.
எரிபொருள் வரிசைகளில் நடந்த மரணங்கள்
முற்பகல் 9 மணியளவில் அவருக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை ஹோகாமை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்தவர்கள் பலர் அண்மைய காலத்தில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடந்த மோதல்களில் சிலர் கொல்லப்பட்டனர்.