இஷாரா செவ்வந்தி பின்னணியில் தொடரும் விசாரணைகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்செல்ல உதவியதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேகநபராக விசாரிக்கப்பட்டு வரும் இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக கூறப்படும் ஜப்னா சுரேஷ் மற்றும் ஜே.கே. பாயின் உதவியாளர் ஆகியோரை வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (02) உத்தரவிட்டுள்ளார்.
தொடரும் விசாரணைகள்
சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்செல்ல ஜே.கே. பாய் எனப்படும் கென்னடி செபஸ்தியன் பிள்ளைக்கு படகு வழங்கியதாக கூறப்படும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அந்தோணி பிள்ளை ஆனந்தன், செவ்வந்தியை போல தோற்றமளிக்கும் "தக்ஷி" என்ற பெண்ணை அறிமுகப்படுத்திய கனகராசா ஜீவராசா எனப்படும் ஜப்னா சுரேஷ் ஆகியோர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படுவார்கள் என்று கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸ் சார்ஜென்ட் பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜப்னா சுரேஷ் என்ற நபர் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு படகை வழங்கிய ஆனந்தம், ஜே.கே. பாய் அளித்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
30 மற்றும் 37 ஆவது சந்தேகநபர்கள் பெயரிடல்
இந்த தகவலின் அடிப்படையில் 15 ஆவது சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவியதற்காக இந்த இரண்டு சந்தேகநபர்களும் 30 மற்றும் 37வது சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதால், அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ் சார்ஜென்ட் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது உண்மைகளை பரிசீலித்த தலைமை நீதிபதி, இரு சந்தேகநபர்களையும் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.