மாவீரர் நினைவேந்தலுக்கு சக உறவினரிடம் கப்பம் கோரிய நபருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் சக உறவினர் ஒருவரிடம் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் ரூபாவை கப்பமாக தரவேண்டும் கோரிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று(28.11.2023) உத்தரவிட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குறுவாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 2021 ம் ஆண்டு அதிஷ்ட லாபச் சீட்டின் மூலம் 10 கோடி ரூபா பணப்பரிசு கிடைத்துள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதனையடுத்து குறித நபரிடம் அவரின் மனைவியின் உறவினரான மச்சான் முறையான நபர் தான் பாதுகாப்புக்கு இருப்பதாகவும் அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கும் பணம் தருமாறு நீண்டகாலமாக அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.11.2023) அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் பணம்கிடைத்த உறவினரிடம் சக உறவினர் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளமை தொடர்பில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து கப்பம் கோரிய நபரை கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 41 வயதுடையவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |