மட்டக்களப்பில் வேட்பாளர் பட்டியலில் கையொப்பம் இடச்சென்ற நபர் தப்பியோட்டம்
போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள வட்டாரம் ஒன்றில் போட்டியிடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை அரசியற்கட்சி ஒன்று கட்டாயத்தின் பெயரில் வாகனத்தில் ஏற்றி விண்ணப்பத்தில் கையொப்பம் இடுவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.
களுவாஞ்சிகுடிப் பகுதியில் அமைந்துள்ள அக்கட்சிக் காரியாலயத்திற்கு நேற்றையதினம் (19.03.2025) அவர்கள் இந்நடவடிக்கைக்காக சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த நபரை ஏற்றிக் கொண்டு சென்ற வாகன சாரதி அக்காரியாலயத்தின் முன்னால் அமைந்துள்ள வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே செல்லுங்கள் என நபரிடம் கூறியுள்ளார்.
கட்டாயத்தின் பேரில்...
ஆனாலும் அந்த நபர் நான் உள்ளே சென்று கையொப்பம் இடுகின்றேன் எனக் கூறிவிட்டு அருகிலிருந்த பற்றைக் காடுகள் ஊடாக தப்பி ஓடி கால்நடையாகவே நடந்து போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்குச் சென்று சேர்ந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
அரசியல் கட்சி ஒன்றின் வாகனத்தில் சென்ற நீங்கள் ஏன் நடந்து வருகின்றீர்கள் என அவரது வீட்டிலுள்ளோரும், கிராமத்தவர்களும் அவரிடம் வினவியுள்ளனர்.
”எனக்கு அரசியல் சரிவராது நான் முடியாது, முடியாது, என தெரிவித்திருந்தும் என்னை கட்டாயத்தின் பெயரிலேயே ஏற்றிக் கொண்டு சென்றனர். நான் அவர்களின் தேர்தல் பிடியிலிருந்து அவர்களுக்குத் தெரியாமலேயே தப்பிப் பிழைத்து கடந்து வந்துவிட்டேன்” என பதிலளித்துள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் அரசியற் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் மிகவும் பிரயத்தனத்திற்கு மத்தியிலேயே தான் அனுபவமில்லாதவர்களையும், கல்வியறிவு குறைந்தவர்களையுமே களமிறக்கியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டிலும், சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பிலும் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ Cineulagam
