உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நிரந்தர ஆணையாளர் நியமனத்தில் தாமதம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு நிரந்தர ஆணையாளர் ஒருவரை நியமிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக, வருவாய் இலக்குகளை அடைவதில் பெரும் தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அரசாங்கத்திடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திணைக்களத்துக்கு கடந்த ஒன்றரை மாதங்களாக நிரந்தர ஆணையாளர் நியமிக்கப்படாததால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டத்தின் அடிப்படையில் சில கடமைகளைச் செய்ய நிரந்தர ஆணையாளர் அவசியம் என்பதால், திணைக்களத்தின் செயல்பாடுகளில் பெரும்பகுதி முடக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறையவுள்ள வருமானம்
நிரந்தர ஆணையாளருக்கே வரி நிலுவைகளை வசூலிக்க, வங்கிக் கணக்குகளை இடை நிறுத்த, புதிய வரிக் கோப்புகளைத் திறக்க, வரி செலுத்தத் தவறியவர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற மற்றும் வரி மதிப்பீட்டு அறிக்கைகளைத் தொகுக்கும் உத்தரவுகளை வழங்க முடியுமென்பதால் உடனடியாக நிரந்தர ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு அரசின் வரி வருவாய் இலக்கு 1,667 பில்லியன் ரூபாயாக உள்ள நிலையில் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த இலக்கை விட 466 பில்லியன் வருமானம் குறைய உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.