“சேதனை பசளையை பயன்படுத்தி இரணைமடு குளத்தின் கீழ் கால போக பயிர்ச்செய்கை”
கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழ் 2021ஆம் ஆண்டுக்கான கால போக நெற் செய்கையான முற்று முழுதாக சேதனை பசளையை மட்டும் பயன்படுத்தி 20882 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இரணைமடு குளத்தின் கீழான பயிர்ச்செய்கை கூட்டம் மெய் நிகர் செயலி ஊடாக நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை புதிதாக 500 ஏக்கர் பரப்பளவு நெற் பயிர்ச்செய்கைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசின் கொள்கைக்கு அமைவாக சேதனை பசளையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.
கால போகப் பயிர்ச்செய்கை ஆரம்ப திகதியாக 06.10.2021 ஆகவும், இறுதி அறுவடைத் திகதி 28.02.2022 ஆகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேதனை பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசினால் மாவட்ட
பிரதி விவசாய பணிப்பாளர் திணைக்களத்திற்கு 90.2 மில்லியன் பெறுமதியான
உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.