உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்த பேரறிவாளன்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், இந்திய உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மும்பாய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைவாக விசாரிக்குமாறு உத்தரவிட கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வந்த பேரறிவாளன்(A. G. Perarivalan) தற்போது பரோலில் வெளியில் வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மும்பாய் குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டமை தொடர்பான ஆவணங்களை தமக்கு வழங்கக் கோரி, பேரறிவாளன் சார்பில் மும்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மும்பாய் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் சஞ்சய் தத்திற்கு தொடர்பு இருந்தாக குற்றம் சுமத்தப்படுகிறது. அப்போது, அவர் தானியங்கி துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்த நிலையில், அவர் வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டார். சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும் சஞ்சய தத் நீண்டகாலம் பரோலிலேயே இருந்து வந்தார்.
சஞ்சய தத்தின் தந்தை சுனில் தத், இந்திய காங்கிரஸ் அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக கடமையாற்றி வந்ததுடன் அவரது சகோதரரி தற்போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.