சீ.ஐ.டி எனக்கூறி ஊடகவியலாளரின் வீட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த மர்ம நபர்கள்
புலனாய்வுப் பிரிவினர் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.
இலங்கையின் தமிழ் நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிற்குள்ளேயே இவ்வாறு பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர் நேர்காணல் நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்கிவிட்டு இன்று அதிகாலை திரும்பியுள்ளார். இவ்வாறு வீடு திரும்பும் போது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரது குடியிருப்பின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் அவர் குறித்த விபரங்களை கேட்டு அவரது வீட்டுக்குள் பிரவேசிக்க வேண்டுமென கூறியுள்ளனர்.
எவ்வாறெனினும் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த நேரத்தில் ஊடகவியலாளரின் வீட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறிக் கொண்டு நீண்ட நேரம் குடியிருப்புத் தொகுதியின் வாயிலில் காத்திருந்து அனுமதி கிடைக்காத காரணத்தினால் திரும்பிச் சென்றுள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஊடகவியலாளர் பொலிஸாரிடம் மின்னஞ்சல் மூலம் கோரியுள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்தொண்டமான் ஆகியோர் பங்கேற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவிட்டு வீடு திரும்பியதன் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சனம் செய்து வந்ததாகவும் இதன் காரணமாகவே மர்ம நபர்கள் தம்மை பின் தொடர்கிறார்கள் என்ற கேள்வி தமக்குள் எழுவதாகவும், தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் தொடர்ச்சியாக தாம் ஊடகப் பணிகளை முன்னெடுக்கப் போவதாகவும், இவ்வாறான அச்சுறுத்தல்கள் தம்மை ஒன்றும் செய்துவிடப் போவதில்லை எனவும் அவர் முகநூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தமிழ் பிரிவு ஊடகப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.