நெருக்கடியால் வீடுகளை விற்பனை செய்ய முடியாமல் திணறும் நபர்கள்
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பிற கட்டிடங்களை விற்கவும், வாடகைக்கு எடுக்கவும் முடியாமல் கிட்டத்தட்ட 10,000 பேர் அவல நிலையில் உள்ளனர்.
அந்த வீடுகளை கட்ட செலவழித்த கோடிக்கணக்கான பணம் வீணாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தகர்கள், நிதி நெருக்கடி காரணமாக இந்த நாட்டு மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்வதை சுமார் 80 வீதத்தால் குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
வெளிநாட்டில் வசிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான இலங்கையர்களே அடுக்குமாடி குடியிருப்புகளை கொள்வனவு செய்து வருவதாகவும், இந்த நிலையில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக பெற்ற வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளில் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய சுமார் 25000 நிறுவனங்கள் மூடப்பட்டதால் அத்துறை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளதாக கட்டுமானத் துறை தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்தன.
பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை, கட்டுமானத் துறையில் உள்ள 650,000 நேரடித் தொழிலாளர்களும், ஏறக்குறைய 700,000 மறைமுகத் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக நிர்மாணத்துறையில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.
இப்பிரச்சினைகளை தனித்தனியாக கண்டறிந்து நடைமுறைப்படுத்தாவிட்டால் பொறியியல் துறை பாரியளவில் வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாது எனவும், இதனை தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் பிரேரணையை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.